கவிப்பேரரசு வைரமுத்துவின் பிறந்தநாளில், அவரின் வரிகளில் வெளியான சில முத்தான பாடல்கள்
தேனி மாவட்டம், வடுக்கப்பட்டியில், ஜூலை 13, 1953ஆம் ஆண்டு, விவசாய குடும்பத்தில் பிறந்த வைரமுத்து, இன்று தனது 70வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். தமிழ் மீது கொண்ட ஈர்ப்பால், தமிழ் மொழியில் முதுநிலை பட்டம் பெற்ற இவர், தனது பாடல் வரிகளுக்கு, இது வரை 7 தேசிய விருதுகளை பெற்றுள்ளார். பத்ம ஸ்ரீ, பத்ம பூஷண், சாகித்ய அகாடெமி என இவர் பல உயரிய விருதுகளை வாங்கியுள்ளார் வைரமுத்து. இளையராஜாவின் இசையில் இன்றும் பிரபலமாக உள்ள 'ஒரு பொன்மாலை பொழுது' என்ற பாடல்தான் இவரை திரையுலகில் அறிமுகம் செய்த பாடல். பாரதிராஜா இயக்கத்தில் உருவான 'நிழல்கள்' என்ற படத்தில் இடம்பெற்ற இந்த பாடலை பாடியது எஸ்.பி.பாலசுப்ரமணியம்.
தேசிய விருது வென்ற பாடல்கள்
'வெட்டி வேரு வாசம்', 'பூங்காற்று திரும்புமா' என 'முதல் மரியாதை'யில் இவர் எழுதிய பாடல்கள் மூலமே இவருக்கு முதல் தேசிய விருது கிடைத்தது. திருமணம் ஆகாத, 50 வயதை நெருங்கும் ஒரு ஆணின் காதலை பேசும் படம் அது. சிறந்த படத்திற்கான தேசிய விருதையும் தட்டி சென்றது. 'சின்ன சின்ன ஆசை' என 'ரோஜா' படத்தில் இவர் எழுதிய பாடலும் தேசிய விருதை வென்ற பாடல் தான். ஒரு பதின்பருவ இளம்பெண்ணின் சின்ன சின்ன ஆசைகளை வரிசைப்படுத்தி எழுதி இருப்பார். 'ஒரு தெய்வம் தந்த பூவே' என தொடங்கும் 'கன்னத்தில் முத்தமிட்டால்' திரைப்பட பாடலும் இவருக்கு தேசிய விருதை வாங்கி தந்தது. ஒரு தாயின் பாசத்தை உணர்ச்சிபூர்வமாக வெளிப்படுத்திய பாடல்.