சிறந்த பின்னணி இசைக்காக தேசிய விருது; ஏழாவது முறையாக விருது பெறும் ஏஆர் ரஹ்மான்
70 தேசிய திரைப்பட விருதுகள் வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 16) அறிவிக்கப்பட்ட நிலையில், இசையமைப்பாளர் ஏஆர் ரஹ்மானுக்கு தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது. பொன்னியின் செல்வன் படத்தின் முதல் பாகத்திற்கு சிறந்த பின்னணி இசையமைத்ததற்காக அவருக்கு இந்த விருது வழங்கப்படுகிறது. இதன் மூலம், ஏஆர் ரஹ்மான் ஏழாவது முறையாக தேசிய விருது பெறுகிறார். இதற்கு முன்னர், தமிழில் 1992இல் ரோஜா 1996இல் மின்சார கனவு, 2002இல் கன்னத்தில் முத்தமிட்டால் மற்றும் 2017இல் காற்று வெளியிடை ஆகிய படங்களுக்கு சிறந்த இசையமைப்பாளர் விருது வென்றுள்ளார். அதேபோல், இந்தியில் 2001இல் வெளியான லகான் படத்திற்கு சிறந்த இசையமைப்பாளர் விருதும், 2017இல் மாம் படத்திற்கு சிறந்த பின்னணி இசைக்கான விருதும் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
ஏழாவது தேசிய விருது
பொன்னியின் செல்வன் படத்திற்கு நான்கு விருதுகள்
எழுத்தாளர் கல்கி எழுதிய வரலாற்று புதினமான பொன்னியின் செல்வன் படத்தை இயக்குனர் மணிரத்னம் இரண்டு பாகங்களாக இயக்கி வெளியிட்டார். இதில் நடிகர்கள் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, பார்த்திபன், சரத்குமார், ஐஸ்வர்யா ராய், த்ரிஷா உள்ளிட்ட மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருந்தன. இந்த படத்தின் முதல் பாகம் 2022இல் வெளியான நிலையில், படத்திற்கு 70வது தேசிய திரைப்பட விருதுகளில் நான்கு விருதுகள் வழங்கப்பட்டுள்ளன. தமிழ் மொழிக்கான சிறந்த திரைப்படமாக பொன்னியின் செல்வன் தேர்வு செய்யப்பட்டுள்ள நிலையில், படத்தின் பின்னணி இசைக்காக ஏஆர் ரஹ்மானுக்கு விருது அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், சிறந்த ஒலி வடிவமைப்பு மற்றும் ஒளிப்பதிவு ஆகிய இரண்டு பிரிவுகளிலும் படத்திற்கு விருது அறிவிக்கப்பட்டுள்ளது.