தர்மன் படப்பூஜை: ரஜினி - கமல் 40 ஆண்டுகால கூட்டணி, 4 இயக்குநர்கள் மாறிய பின்னணி
செய்தி முன்னோட்டம்
தமிழ் திரையுலகமே ஆவலுடன் எதிர்பார்த்து கொண்டிருந்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் 'தர்மன்' (தலைவர் 173) திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ பூஜா விழா கோலாகலமாக நடைபெற்றது. உலகநாயகன் கமல் ஹாசனின் ராஜ் கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் (RKFI) நிறுவனம் தயாரிக்கும் இத்திரைப்படத்தை 'ஓ மை கடவுளே', 'டிராகன்' படங்களின் இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து இயக்குகிறார். தமிழ் சினிமாவின் இரு பெரும் ஆளுமைகள் இணைந்துள்ள இந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த விழாவில் ரஜினிகாந்த், கமல்ஹாசன் மற்றும் இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து ஆகியோர் பகிர்ந்த சுவாரசியமான தகவல்கள் இதோ:
4 இயக்குநர்கள்
4 இயக்குநர்கள் மாறிய பின்னணி: ரஜினிகாந்த் ஓபன் டாக்
விழாவில் பேசிய ரஜினிகாந்த், இந்தத் திட்டம் தற்போதைய வடிவத்தை எட்டுவதற்கு முன்பு நான்கு இயக்குநர்கள் கைமாறிய கதையை விவரித்தார். ஆரம்பத்தில் இக்கூட்டணிக்காக இயக்குநர் கே.எஸ்.ரவிகுமார் ஒரு கதையை உருவாக்கினார், ஆனால் சில காரணங்களால் அது அடுத்த கட்டத்திற்கு நகரவில்லை. இதையடுத்து இயக்குநர் சுந்தர்.சி உள்ளே வந்தார். அவரும் இந்தத் திட்டத்தில் இருந்து விலக நேரிட்டது. அதன்பின் சிபி சக்கரவர்த்தி அணு விஞ்ஞானிகள் மற்றும் ஆயுதங்கள் பின்னணியில், ரஷ்யா மற்றும் ஆப்கானிஸ்தானில் படமாக்கும் வகையில் ஒரு பிரம்மாண்ட கதையை கூறினார். கதை நன்றாக இருந்தாலும், பட்ஜெட் காரணமாக அதுவும் தள்ளிப்போனது. இறுதியாக அஸ்வத் மாரிமுத்துவின் 'டாக்டர் ஸ்வாக் தர்மன்' கதை ரஜினி, கமல் இருவருக்குமே மிகவும் பிடித்துப் போக, படம் தற்பொழுது பூஜையுடன் தொடங்கியுள்ளது.
கமல்
"40 ஆண்டுகால கனவு நனவாகியுள்ளது": உருகிய கமல்ஹாசன்
தயாரிப்பாளர் என்ற முறையில் பேசிய கமல்ஹாசன்,"AVM ஸ்டூடியோவின் வேப்பமரத்தடியில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்த இரு இளைஞர்கள் இன்று இவ்வளவு தூரம் வந்திருப்பது பெருமையாக உள்ளது. நாங்கள் இருவரும் இணைந்து மும்பை சென்ற ஒரு பயணத்தின் போது, இனி சேர்ந்து நடிப்பதில்லை என்றும், எதிர்காலத்தில் ஒருவருக்காக மற்றொருவர் படம் தயாரிக்க வேண்டும் என்றும் முடிவெடுத்தோம். அந்த 40 ஆண்டுகால வாக்குறுதி இன்று 'தர்மன்' மற்றும் 'KHxRK' ஆகிய படங்கள் மூலம் நனவாகியுள்ளது" என்று கூறினார். மேலும், "வழக்கமாக ஹீரோக்கள் தான் நிம்மதியாக இருப்பார்கள், தயாரிப்பாளர் தான் ஓடிக்கொண்டிருப்பார். ஆனால் இங்கே ரஜினி, தான் கமல் ஹாசன் தயாரிப்பில் நடிப்பதை ஆவலுடன் எல்லோருக்கும் போன் செய்து சொல்லி எங்களை தூங்கவிடாமல் செய்கிறார்" என்று சிரித்துக்கொண்டே குறிப்பிட்டார்.
விவரங்கள்
அனிருத்தின் 8 பாடல்கள் மற்றும் 'டாக்டர் ஸ்வாக்' கேரக்டர்
அஸ்வத் மாரிமுத்து பேசுகையில்,"கமல் சாரை சந்திக்க எனக்குப் பயமாக இருந்தது. ஆனால் அவரோ, 'நான் ஒரு ரஜினி ரசிகன். ஒரு செம ரஜினி படம் பண்ணுங்க' என்று கூறி என்னை நெகிழ வைத்தார். ரஜினி சாரும் நள்ளிரவு 11 மணிக்குக் கூப்பிட்டாலும் ஒரு அசோசியேட் டைரக்டர் போல என் ஐடியாக்களை கேட்டு முழு சுதந்திரம் தந்தார். இது 'ரூபாய் 5 டாக்டர்' கதை அல்ல; இது 'டாக்டர் ஸ்வாக் தர்மன்' என்ற மாஸான மற்றும் எமோஷனல் கலந்த கதை" என்றார். இத்திரைப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். அஸ்வத் -அனிருத் கூட்டணியில் உருவாகும் முதல் ஆல்பம் இதுவாகும். படத்தில் மொத்தம் 8 பாடல்கள் இடம்பெறுகின்றன என்றும், ஒவ்வொன்றும் ஒவ்வொரு வெரைட்டியில் இருக்கும் என்றும் அஸ்வத் உறுதிப்படுத்தியுள்ளார்.
குழு
தொழில்நுட்ப குழு மற்றும் படப்பிடிப்பு விபரம்
'பேட்ட' திரைப்படத்திற்கு பிறகு ரஜினிகாந்துடன் மீண்டும் நடிகை சிம்ரன் இணைகிறார். 'பேட்ட'யில் இவர்களின் காட்சிகள் குறைவாக இருந்த நிலையில், இதில் வலுவான கதாபாத்திரங்கள் அமைக்கப்பட்டுள்ளதாக ரஜினி தெரிவித்துள்ளார். இவர்களுடன் நடிகை ராஷி கண்ணாவும் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். படத்தின் ஒளிப்பதிவை நிகேத் பொம்மி ஏற்கிறார், படத்தொகுப்பு பிரதீப் ஈ ராகவ் மற்றும் சண்டைப் பயிற்சியினை அன்பறிவ் மேற்கொள்கின்றனர். இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு வரும் வியாழக்கிழமை முதல் முறைப்படி தொடங்குகிறது. முதல் ஷெட்யூலில் ரஜினிகாந்தின் மாஸான இண்ட்ரோ பாடல் (Intro Song) படமாக்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.