பொன்னியின் செல்வன் 2 படத்தில் இடம்பெற்ற பாடல், இசை திருட்டில் உருவானதா?
கடந்த ஆண்டு, காந்தாரா தயாரிப்பாளர்கள் மீது, அதில் இடம்பெற்ற பாடல், 'தாய்க்குடம் பிரிட்ஜ்' என்ற தனியார் இசை குழு அமைத்த பாடலில் இருந்து திருடப்பட்டது என ஓர் வழக்கு தொடரப்பட்டது நினைவிருக்கலாம். இசை திருட்டு என்பது கிரிமினல் குற்றம் என பலரும் அறிந்தது அந்த தருணத்தில் தான். அதேபோல, தற்போது வெளியாகியுள்ள பொன்னியின் செல்வன் 2 படத்தில், ஏ.ஆர்.ரஹ்மானின் இசையமைப்பில் வெளியான பாடல் ஒன்றின் மீதும் இதே போன்ற குற்றச்சாட்டு வைக்கப்பட்டுள்ளது. பொன்னியின் செல்வன் படத்தில், ஷங்கர் மஹாதேவன், சித்ரா, ஹரிணி மற்றும் குழுவினர் பாடிய வீரா ராஜா வீரா பாடல் தான் தற்போது சர்ச்சையில் சிக்கியுள்ளது. தில்லியைச் சேர்ந்த, துருபத் பாடகர், உஸ்தாத் வாசிபுதின் டாகர் என்பவர்தான் இந்த குற்றசாட்டை வைத்தது.
தனது தந்தை இசையமைத்த பாடலை ரஹ்மான் திருடியதாக கூறும் டாகர்
டாகரின் கூற்றுப்படி, சர்ச்சைக்குரிய அந்த பாடல், தனது தந்தையும், மாமாவும் மெட்டமைத்து பாடிய, சிவா தாண்டவத்தில் இருந்து உருவப்பட்டது என்கிறார். மேலும் அவர், "மெட்ராஸ் டாக்கீஸ் மற்றும் திரு. ரஹ்மான் ஆகியோர் எங்கள் குடும்பத்தின் அனுமதியைப் பெற்றிருந்தால், நான் சந்தோஷப்பட்டிருப்பேன். நான் ஒருபோதும் வேண்டாம் என்று சொல்ல மாட்டேன். ஆனால், பெரும் வணிக லாபத்திற்காக இப்படிச் செய்வது மிகவும் தவறாக உள்ளது." மேலும், 1978 ஆம் ஆண்டு ஆம்ஸ்டர்டாமில் உள்ள ராயல் டிராபிகல் இன்ஸ்டிடியூட் கச்சேரியில், ஜூனியர் டாகர் சகோதரர்களால், சிவ ஸ்துதி முதன்முதலில் பதிவு செய்யப்பட்டது என்று அவர் கூறினார். டாகரின் கருத்துக்கு மறுப்பு தெரிவித்து மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனமும் பதில் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.