ஃபியட் கார்: சூப்பர் ஸ்டார் முதல் அமிதாப் வரை பொக்கிஷமாக பார்க்கும் திரை பிரபலங்கள்
கஷ்டப்படும் மனிதர்கள் வளர்ந்த பிறகு அவர்கள் விலை உயர்ந்த மற்றும் நவீனமான பொருட்களை வாங்கினாலும், அவர்கள் வளரும் சமயத்தில் அவர்களுடன் இருந்த பொருட்களை அவர்களால் மறக்க முடியாது. அதே போல தான் திரை பிரபலங்களும். ₹100 கோடிக்கும் மேல் சம்பளம் வாங்கும் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் உள்ளிட்ட நடிகர்களால், மிக விலை உயர்ந்த கார்களையும் வாங்க முடியும் என்றாலும், அவர்கள் முதன் முதலில் வாங்கிய காரை அவர்கள் தற்போதும் பொக்கிஷமாக பாதுகாத்து வருகின்றனர். அந்த வகையில், அவர்களின் முதல் ஃபியட் காரை பொக்கிஷமாக பாதுகாக்கும், திரை பிரபலங்கள் யார் யார் என்பதை இங்கு பார்க்கலாம்.
அமிதாப்பச்சன்
பாலிவுட்டின் சூப்பர்ஸ்டார் அமிதாப்பச்சன் பல விலை உயர்ந்த கார்களை தனது கராஜில் வைத்திருந்தாலும், பல லிமிடெட் எடிஷன் கார்களை வாங்குவதில் ஆர்வம் காட்டினாலும், அவரின் ஃபியட் 1100 கார் அவருக்கு என்றுமே ஸ்பெஷல். இந்த காரை அவரின் முதல் படமான சாத் ஹிந்துஸ்தானியின் வெற்றிக்கு பின்னர், அவர் செகண்ட் ஹேண்ட் காராக வாங்கியது குறிப்பிடத்தக்கது. பென்ட்லி கான்டினென்டல் ஜிடி முதல் ரோல்ஸ் ராய்ஸ், இவர் பல கார்களை வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
ஜாக்கி ஷெராஃப்
ஃபியட் 1100 காரை பாலிவுட் நடிகர் ஜாக்கி ஷெராஃப் புதிதாக வாங்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால் சிலர் அவரின் பழைய காரை மீண்டும் புதுமைப்படுத்தி உள்ளதாகவும் கூறுகின்றனர். அவர் சமீபத்தில் புதிய ஃபியட் 1100 இல் ஒரு நிகழ்விற்கு வந்தார், ஆனால் காரை அவர் ஓட்டாமல் இணை டிரைவர் இருக்கையில் அமர்ந்திருந்தார். முழுமையாக மீட்டெடுக்கப்பட்ட உட்புறத்துடன், கார் சிறந்த நிலையில் இருந்ததை பார்க்க முடிந்தது. இது பல நவீன அம்சங்களுடன் மீண்டும் மாற்றியமைக்கப்பட்டிருக்கலாம் எனக் கூறப்படுகிறது.
புதுப்பிக்கப்பட்ட ஃபியட் காரில் வந்த ஜாக்கி ஷெராஃப்
ரஜினிகாந்த்
எளிமையான வாழ்க்கையையே விரும்பும் ரஜினிகாந்த், சமீபத்தில் தான் தனது இன்னோவாவில் இருந்து ஆடம்பரமான எஸ்யூவிக்கு மாறினார். இந்நிலையில், ரஜினிகாந்தின் முதல் கார் 1980களில் வாங்கப்பட்ட வெள்ளை நிற பிரீமியர் பத்மினி கார் ஆகும். கிளாசிக் வாகனமாக கருதப்படும் இது, 1.1 லிட்டர் எஞ்சின் மூலம் இயக்கப்படுகிறது. இந்த வகை கார் மிகவும் அரிதான காராக கருதப்படுகிறது. பல ஆடம்பரமான கார்கள் இருந்தாலும், இக்காரை அவர் பொக்கிஷமாக பாதுகாத்து வருகிறார்.
தர்மேந்திரா
பழம்பெரும் நடிகர் தர்மேந்திரா 1960களில் தான் வாங்கிய ஃபியட் 1100 காரை இன்னும் பயன்படுத்தி வருகிறார். 60 வருடங்களாக இந்த கார் தன்னிடம் இருப்பதாகவும், ₹18,000க்கு தான் அதை வாங்கியதாகவும் ஒருமுறை அவரே கூறியுள்ளார். தர்மேந்திரா முன்பு ஒரு நேர்காணலில், தனது வேலையை இழக்க நேரிட்டால், பின்னர் அதே காரை டாக்ஸியாகப் பயன்படுத்த முடியும் என்பதால், அந்த காரை விற்கவில்லை என தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.