அமரன் படத்தின் டப்பிங் பணிகள் நிறைவு; படக்குழு அறிவிப்பு
சிவகார்த்திகேயனின் அமரன் திரைப்படத்தை வரும் தீபாவளிக்கு திரைக்கு கொண்டுவருவதில் படக்குழு தீவிரமாக உள்ளது. இதன் ஒரு பகுதியாக படத்தின் கதாநாயகன் சிவகார்த்திகேயன் மற்றும் இதர நடிகர், நடிகைகள் அனைவரும் தங்கள் பகுதிகளுக்கான டப்பிங்கை முடித்துள்ளது. படத் தயாரிப்புக்குழு இதை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. ரங்கூன் புகழ் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில், மறைந்த ராணுவ அதிகாரி மேஜர் முகுந்த் வரதராஜனின் கதையை அமரன் சொல்கிறது. இந்தக் கதை ஷிவ் அரூர் மற்றும் ராகுல் சிங்கின் இந்தியாஸ் மோஸ்ட் ஃபியர்லெஸ் என்ற புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டது. இப்படத்தில் சிவகார்த்திகேயன் இந்திய ராணுவத்தின் ராஜ்புத் ரெஜிமென்ட்டில் கமிஷன் செய்யப்பட்ட அதிகாரியான மேஜர் முகுந்த் வரதராஜனாக நடித்துள்ளார்.
ராணுவ வீரரின் உண்மைக் கதை
ஜம்மு மற்றும் காஷ்மீரில் உள்ள 44 வது ராஷ்ட்ரிய ரைபிள்ஸ் பட்டாலியனில் பணிபுரியும் போது, பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கையின் போது, அவரது துணிச்சலான செயலுக்காக முகுந்த் வரதராஜனுக்கு மரணத்திற்குப் பின் அசோக் சக்ரா வழங்கப்பட்டது. அவரது உண்மைக் கதையை அடிப்படையாக வைத்து இந்த படம் தயாரிக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் சாய் பல்லவியும் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்க, சி.எச்.சாய் ஒளிப்பதிவு செய்துள்ளார். கலைவாணன் படத்தொகுப்பு பணிகளையும் ஸ்டீபன் ரிக்டர் சண்டைப் பயிற்சியையும் மேற்பார்வையிட்டுள்ளனர். இப்படத்தை கமல்ஹாசனின் ராஜ் கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் மற்றும் சோனி பிக்சர்ஸ் இன்டர்நேஷனல் புரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரிக்கிறது. அக்டோபர் 31ஆம் தேதி வெளியாகும் இந்தப் படம் ஜெயம் ரவியின் பிரதர் மற்றும் கவினின் பிளடி பெக்கருடன் மோதவுள்ளது.