நீங்கள் எப்போதும் எங்கள் 'தல'தான்: ஐபிஎல் ஓய்வை அறிவித்த தோனிக்கு திரை பிரபலங்கள் உருக்கமான பிரியாவிடை
செய்தி முன்னோட்டம்
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் அடையாளமாக திகழ்ந்த எம்.எஸ். தோனி, 18 ஆண்டுகால தனது விளையாட்டுக்கு விடைகொடுத்துவிட்டு, அணியின் ஆலோசகராகப் பொறுப்பேற்கவுள்ளார். தோனியின் ஓய்வு அறிவிப்பைத் தொடர்ந்து, திரை பிரபலங்கள் தங்களது அன்பையும் மரியாதையையும் சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளனர். நடிகர் தனுஷ் வெளியிட்டுள்ள பதிவில், "சில வீரர்கள் நம்மை மகிழ்விப்பார்கள்; சிலர் நமது வாழ்க்கையின் ஒரு அங்கமாகவே மாறிவிடுவார்கள். எம்.எஸ். தோனி இவ்விரண்டுமாகவும் இருந்துள்ளார். அனைத்து நினைவுகளுக்கும் நன்றி." "நீங்கள் இல்லாமல் ஆட்டம் முன்பு போல் இருக்காது, ஆனால் மைதானத்தின் ஓரத்தில் உங்களை ஆலோசகராக காணக் காத்திருக்கிறேன்." ஆயிரக்கணக்கான இளைஞர்கள் உங்களது ஆலோசனையாலும் அறிவாலும் பயனடைந்துள்ளனர்; அது வருங்காலத் தலைமுறையையும் தொடர்ந்து ஊக்குவிக்கும் என நம்புகிறேன். பிரியாவிடை சாம்பியன்" என உருக்கமாகக் குறிப்பிட்டுள்ளார்.
பெருமிதம்
நீங்கள் எப்போதும் எங்கள் தலதான்
நடிகர் கார்த்தி வெளியிட்டுள்ள பதிவில், "ஒரு இளைஞன் நம் கண் முன்னே ஜாம்பவானாக வளர்ந்ததைப் பார்த்த தலைமுறையைச் சேர்ந்தவன் என்பதில் நான் மிகவும் பெருமைப்படுகிறேன்."
"தோனி சார், 7 என்ற எண் என்பது வெறும் எண்ணைத் தாண்டியது. சென்னையைப் பொறுத்தவரை அது எண்ணற்ற உணர்வுகள், மறக்க முடியாத வெற்றிகள் மற்றும் கடைசி வரை நம்பிக்கையை இழக்கக் கூடாது என்பதை கோடிக்கணக்கான மக்களுக்கு உணர்த்திய அற்புதமான தருணங்களைக் குறிக்கிறது."
"உங்களது ஆட்டத்தால் மட்டுமின்றி, பணிவு, கண்ணியம் மற்றும் களத்திற்கு உள்ளேயும் வெளியேயும் நீங்கள் நடந்துகொண்ட விதத்தாலும் ஒரு தலைமுறைக்கே உத்வேகமாகத் திகழ்ந்துள்ளீர்கள்."
"உங்களது பயணம் எங்கு சென்றாலும், நீங்கள் எப்போதும் எங்கள் தலதான்" என நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்."
வாழ்த்துகள்
பிரபலங்களின் உருக்கமான வாழ்த்துகள்
இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் குமார், தோனியின் களத்திற்கு உள்ளேயும் வெளியேயும் உள்ள அழகிய தருணங்களைக் கொண்ட வீடியோ ஒன்றைப் பகிர்ந்து, "எப்போதும் உங்களை நேசிக்கிறோம் எம்.எஸ். தோனி" என தனது அன்பை வெளிப்படுத்தியுள்ளார்.
மேலும், இயக்குநர் வெங்கட் பிரபு, "அனைத்திற்கும் நன்றி! எல்லா அன்பிற்கும், நினைவுகளுக்கும், உத்வேகத்திற்கும் நன்றி! பிரியாவிடை என் கேப்டன்!" எனப் பதிவிட்டுள்ளார்.
இயக்குநரும் எழுத்தாளருமான ரத்னகுமார் வெளியிட்டுள்ள பதிவில், "வெற்றித் தருணங்களில் எப்போதும் ஓரமாக அமைதியாக நின்றதைப் போலவே, எந்தச் சத்தமும் இன்றி உங்களது சகாப்தத்தை நிறைவு செய்துள்ளீர்கள். ஒரு சிங்கம் எப்போதும் சிங்கம்தான்; ஆலோசகர் பணி சிறக்க வாழ்த்துகள்" எனத் தெரிவித்துள்ளார்.