மூன்றாவது தலைமுறை நடிகையாக சாதித்து காட்டிய ஐஸ்வர்யா ராஜேஷ்
தமிழ் திரையுலகில், திறமையான நடிகை என்றால், அது ஐஸ்வர்யா ராஜேஷ் தான், என அனைவரும் ஒத்துக்கொள்ளும் அளவிற்கு, தனது நேர்த்தியான நடிப்பாலும், சிறந்த கதை தேர்வாலும், தமிழ் மட்டுமின்றி, தெலுங்கு, மலையாளம் என தென்னிந்திய திரையுலகில் பிரபலமானவர் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். சென்னையில் பிறந்து வளர்ந்த ஐஸ்வர்யாவின் பூர்வீகம் ஆந்திரா என அவரே பேட்டிகளில் குறிப்பிட்டுள்ளார். அவர், சிறு வயதிலேயே தனது தந்தையை இழந்தவர் என்பது வரை நீங்கள் அறிந்திருக்கலாம். ஆனால், அவர் தந்தையும் ஒரு பிரபல நடிகர் என உங்களில் எத்தனை பேருக்கு தெரியும்? ஊடக செய்திகளின் படி, சமீபத்தில், ஆந்திராவில் நடந்த ஒரு திரைப்படவிழாவில், நடிகர் சிரஞ்சீவிதான் இதை வெளியுலகிற்கு ஆச்சர்யத்துடன் தெரிவித்திருந்தார்.
தாத்தா, தந்தை வழியில் நடிகையான ஐஸ்வர்யா ராஜேஷ்
நடிகை ஐஸ்வர்யா ராஜேஷின் தந்தை ராஜேஷ், தெலுங்கு, மலையாளம் போன்ற பல்வேறு மொழிகளில், வில்லன், குணச்சித்திர வேடங்களில் நடித்துள்ளார். ராஜேஷின் தந்தை, அதாவது, ஐஸ்வர்யாவின் தாத்தாவின் பெயர் அமர்நாத். அவர் தெலுங்கு, ஹிந்தி படவுலகில், நடிகராகவும், தயாரிப்பாளராகவும் இருந்துள்ளார். துரதிருஷ்டவசமாக, ஐஸ்வர்யாவுக்கு 8 வயது இருக்கும்போதே, ராஜேஷ் இறந்து விட, குழந்தைகளை தனியாக வளர்த்தார் ஐஸ்வர்யாவின் தாயார் நாகமணி. தொடர்ந்து, மூன்று சகோதரர்களில் இருவர் இறக்க, ஐஸ்வர்யா, குடும்பத்தை காப்பாற்ற தலையெடுத்தார். நாகமணியின் முயற்சியால், சினிமாத்துறையில் நுழைந்தார் ஐஸ்வர்யா. தற்போது தனது நடிப்பு திறமையால் முன்னணி நடிகையாக வளர்ந்துள்ளார். ஆக, மூன்றாவது தலைமுறையாக, கலைத்துறையில் கால்பதித்து, வென்று காட்டியுள்ளார், ஐஸ்வர்யா ராஜேஷ். ஐஸ்வர்யாவின் தாயார் நாகமணியும் ஒரு டான்சர் என்பது குறிப்பிடத்தக்கது.