'பொண்ணுங்களுக்குன்னா தீட்டா, எந்த கடவுளும் சொல்லவில்லை'-ஐஸ்வர்யா ராஜேஷ் அதிரடி
மலையாளத்தில் வெளியாகி மாபெரும் வெற்றிபெற்ற படம் தான் 'தி கிரேட் இந்தியன் கிச்சன்'. இப்படம் தற்போது தமிழில் ரீமேக் செய்யப்படுகிறது. இயக்குனர் ஆர்.கண்ணன் இயக்கும் இப்படத்தில் ராகுல் ரவீந்திரன், ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோர் முன்னணி காதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள். பாலசுப்ரமணியம் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு ஜெர்ரி சில்வெஸ்டர் வின்சென்ட் இசையமைக்கிறார். இந்நிலையில் 'தி கிரேட் இந்தியன் கிச்சன்' படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு நேற்று (ஜன., 24) நடந்தது. அப்போது பத்திரிக்கையாளரிடம் ஐஸ்வர்யா ராஜேஷ், 'கடவுள் அனைவருக்கும் ஒன்று தான். ஆண்-பெண் வித்தியாசமெல்லாம் கடவுளுக்கு இல்லை. என் கோயிலுக்கு இவர்கள் வரலாம், இவர்கள் வரக்கூடாது, என்று எந்த கடவுளும் சொல்லவில்லை' என்று பகிரங்கமாக தனது கருத்துக்களை கூறினார்.
தீட்டு என்று எந்த கடவுளும் சொல்லவில்லை, ஐஸ்வர்யா ராஜேஷ் பேச்சு
தொடர்ந்து பேசிய அவர், எந்த கடவுளும் இத பண்ணக்கூடாது, இத சாப்பிடக்கூடாது என்று சொல்லவில்லை. அப்படி எந்த கடவுளாவது கூறியிருந்தால் சொல்லுங்கள். எல்லாமே மனிதர்கள் உருவாக்கிய சட்டங்கள் தான். பீரியட்ஸ் நேரத்தில் இதை செய்யக்கூடாது, கோவிலுக்கு வர கூடாது, தீட்டு என்று எந்த கடவுளும் சொல்லவில்லை. சபரிமலை மட்டுமல்ல, எந்த கோயிலிலும் எந்த கடவுளும் பக்தர்களுக்கு கட்டளை பிறப்பிக்கவில்லை. எனக்கு இது போன்ற விஷயங்களில் நம்பிக்கை இல்லை என்று கூறியுள்ளார். மேலும் பேசிய அவர், இப்பொழுதும் ஆணாதிக்கம் கிராமங்களில் இருக்க தான் செய்கிறது என்பது எனது கருத்து என்றும் கூறினார். ஐஸ்வர்யா ராஜேஷ் சபரிமலை கோயிலில் பெண்களை அனுமதிக்காதது குறித்து பேசியது தற்போது பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.