அமீருடனான சர்ச்சைக்கு வருத்தம் தெரிவித்தார் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா
சமீபத்தில் விஸ்வரூபமாக வெடித்த இயக்குனர் அமீர் சர்ச்சை தொடர்பாக, தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா தற்போது அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அவருக்கு சொந்தமான ஸ்டுடியோ கிரீன் தயாரிப்பு நிறுவனத்தின் ட்விட்டர் பக்கம் வாயிலாக வெளியிடப்பட்ட அந்த அறிக்கையில், "பருத்திவீரன் பிரச்சனை 17 ஆண்டுகளாக நடந்து வருகிறது." "நான் இது நாள் வரை அதைப்பற்றி பேசியது இல்லை. என்றைக்குமே நான் அமீர் அண்ணா என்று தான் அவரை குறிப்பிடுவேன்." "ஆரம்பத்தில் இருந்தே அவர் குடும்பத்துடன் நெருங்கி பழகியவன். அவர் சமீபத்திய பேட்டிகளில், என் மீது சுமத்திய பொய்யான குற்றச்சாட்டுகள் என்னை மிகவும் காயப்படுத்தியது."
"சினிமா துறையில் பணியாற்றும் அனைவரையும் மதிப்பவன் நான்" - ஞானவேல் ராஜா
"அதற்கு பதில் அளிக்கும் வகையில் நான் பயன்படுத்திய சில வார்த்தைகள் அவர் மனதை புண்படுத்தி இருந்தால், அதற்கு நான் மனப்பூர்வமாக வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன்." "என்னை வாழவைக்கும் சினிமா துறையையும், அதில் பணிபுரியும் அனைவரையும் மிகவும் மதிப்பவன் நான்" என ஞானவேல் ராஜா வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஞானவேல் ராஜா தயாரிப்பில் அமீர் இயக்கிய பருத்திவீரன் திரைப்படம் கடந்த 2007 ஆம் ஆண்டு வெளியானது. இந்த படம் வெளியாகும் முன்பே, அமீர் மற்றும் ஞானவேல் ராஜா இடையே திரைப்படத்தின் பட்ஜெட் குறித்து பிரச்சனை வெடித்ததாக கூறப்படுகிறது. இவர்கள் பிரச்சனையை பல்வேறு சினிமா சங்கங்கள் தலையிட்டு தீர்க்க முடியாததால், விவகாரம் நீதிமன்றம் வரை சென்றது.
அமீர்-ஞானவேல் ராஜா பிரச்சனையில் இதுவரை நடந்தவை
இந்த படம் தொடர்பாக ஒரு நேர்காணலில் பேசிய இயக்குனர் அமீர், இத்திரைப்படத்தால் தனக்கு ₹2 கோடி நஷ்டம் என தெரிவித்தார். இதற்கு மற்றொரு நேர்காணல் வழியாக பதில் அளித்த ஞானவேல் ராஜா, அமீரை "வேலை தெரியாதவர்" என்றும், "திருடன்" என்றும் விமர்சித்திருந்தார், ஞானவேல் ராஜாவின் விமர்சனத்திற்கு சினிமா துறையில் கடும் கண்டனங்கள் எழுந்த நிலையில், பல்வேறு நடிகர்கள் அமீருக்கு ஆதரவு தெரிவித்தனர். நடிகர்கள் பொன்வண்ணன், சசிகுமார், இயக்குனர் சமுத்திரக்கனி ஆகியோர், ஞானவேல் ராஜாவிற்கு எதிராக தங்களது கடும் கண்டனங்களை பதிவு செய்திருந்தனர். இதன் தொடர்ச்சியாகவே, தற்போது ஞானவேல் ராஜா வருத்தம் தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.