2 ஆண்டுக்கால இடைவெளிக்கு பின்னர் இமயமலை செல்லவுள்ளார் ரஜினிகாந்த்
நடிகர் ரஜினிகாந்த், நடிகை தமன்னா, நடிகர் யோகி பாபு, நடிகை ரம்யா கிருஷ்ணன் ஆகியோர் நடித்திருக்கும் 'ஜெயிலர்' திரைப்படம், ஆகஸ்ட் 10ஆம் தேதி திரைக்கு வர இருக்கிறது. 'பீஸ்ட்' படத்தின் இயக்குநர் நெல்சன் இந்த படத்தையும் இயக்கி இருக்கும் நிலையில், அனிருத் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். இந்நிலையில் இப்படத்தின் போஸ்ட் ப்ரொடக்க்ஷன் பணிகள் அனைத்தும் முடிவடைந்த பின்னர், நமது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஒரு வார பயணமாக ஆகஸ்ட் 6ம் தேதி இமயமலை செல்லவுள்ளார் என்றும், இதற்கான அதிகாரபூர்வ தகவல் விரைவில் வெளியாகும் என்றும் தகவல்கள் தெரிவிக்கிறது. நடிகர் ரஜினி தனது ஒவ்வொரு படத்தின் ரிலீஸுக்கு முன்னரும் இமயமலை செல்வதை கடந்த 2010ம் ஆண்டு வரை வழக்கமாக வைத்திருந்தார்.
ப்ரிவியூ ஷோ'வினை பார்த்த பின்னர் ரஜினி புறப்படுவார் என தகவல்
அதன் பின்னர் அவர் உடல்நிலை பாதிப்பு காரணமாக அவரால் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. அதிலிருந்து மீண்ட ரஜினி மீண்டும் 2018ம் ஆண்டில் காலா, 2.0 படங்களுக்கு பின்னர் இமயமலை சென்றார். 2019ல் கொரோனா பாதிப்பு ஏற்பட்டதால் மீண்டும் அவரால் பயணம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டது. இந்நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் 2 ஆண்டு கால இடைவெளிக்கு பின்னர் தற்போது மீண்டும் தனது இமயமலை பயணத்தினை துவங்கவுள்ளார். பத்ரிநாத், கேதர்நாத், பாபா குகை உள்ளிட்ட பகுதிகளுக்கு அவர் செல்லவுள்ளார். மேலும் இவர் ஜெயிலர் படத்தின் ப்ரிவியூ ஷோ'வினை பார்த்த பின்னரே புறப்படவுள்ளார் என்றும், படம் இங்கு ரிலீஸாகும் நேரத்தில் அவர் இமயமலையில் இருப்பார் என்றும் நெருங்கிய வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.