
'பென்ஸ்' படத்தின் ஒளிப்பதிவாளர் கெளதம் ஜார்ஜை கரம் பிடிக்கிறார் தான்யா ரவிச்சந்திரன்!
செய்தி முன்னோட்டம்
தமிழ் திரைப்பட நடிகை தான்யா ரவிச்சந்திரன், ஒளிப்பதிவாளர் கெளதம் ஜார்ஜை திருமணம் செய்யவுள்ளார். தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நிச்சயதார்த்த புகைப்படத்தை பகிர்ந்ததுடன், "ஒரு முத்தம், ஒரு வாக்குறுதி... என்றென்றும், எப்போதும்" என பதிவிட்டுள்ளார். இந்த அறிவிப்புக்குப் பின்னர், திரையுலகத்தைச் சேர்ந்தவர்கள் மற்றும் ரசிகர்கள் இருவருக்கும் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர். மணமகன் கெளதம் ஜார்ஜ் தமிழ்த்திரையுலகில் ஒளிப்பதிவாளராக பணியாற்றி வருகிறார். விஜய் சேதுபதி நடித்த 'அனபெல் சேதுபதி' மற்றும் பாவனா நடித்த 'தி டோர்' போன்ற படங்களுக்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். தற்போது, அவர் லோகேஷ் கனகராஜ் தயாரிப்பில் உருவாகும், ராகவா லாரன்ஸ், நிவின் பாலி நடிக்கும் 'பென்ஸ்' படத்தில் ஒளிப்பதிவாளராக பணியாற்றி வருகிறார்.
திரைப்பயணம்
தான்யா ரவிச்சந்திரனின் திரைப்பயணம்
பழம்பெரும் நடிகர் ரவிச்சந்திரனின் பேத்தியான தன்யா ரவிச்சந்திரன், 2016ஆம் ஆண்டு 'பலே வெள்ளையத் தேவா' படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் அறிமுகமானார். தொடர்ந்து, கருப்பன், நெஞ்சுக்கு நீதி, மாயோன், பிருந்தாவனம், அகிலன், ரசவாதி உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். அருண் விஜயுடன் நடித்துவரும் 'ரெட்ட தல' படம் தற்போது தயாரிப்பில் உள்ளது. இது தவிர தெலுங்கில் சிரஞ்சீவி நடித்த 'காட்ஃபாதர்' படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும், கிருத்திகா உதயநிதி இயக்கிய 'பேப்பர் ராக்கெட்' வெப் தொடரிலும் நடித்துள்ளார். தான்யா மற்றும் கெளதம் ஜார்ஜின் திருமண தேதி விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.