தலைவர்170 படப்பிடிப்பில் நடிகை ரித்திகா சிங் காயம்
தலைவர்170 திரைப்படத்தின் படப்பிடிப்பில், நடிகை ரித்திகா சிங் காயமடைந்ததாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில்வீடியோ வெளியிட்டுள்ளார். டிஜே ஞானவேல் இயக்கத்தில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் தலைவர்170 படப்பிடிப்பு மும்மூருமாக நடைபெற்று வருகிறது. இப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கும் ரித்திகா சிங், ஒரு சண்டைக் காட்சியின் போது காயமடைந்தார். அவர் எப்படி காயமடைந்தார் என்பது குறித்த வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார், அதில் அவர், "நான் மிகவும் வருத்தமாக இருக்கிறேன். அங்கே கண்ணாடி இருக்கிறது; கவனமாக இருங்கள் எனக் கூறினார்கள். ஆனால், நான்தான் கேட்கவில்லை. சில நேரங்களில் நம்மால் வேகத்தை கட்டுப்படுத்த முடியாது இல்லையா? நான் கட்டுப்பாட்டை இழந்துவிட்டேன். அதனால் இது நடந்தது" என தெரிவித்துள்ளார்.
மும்முறமாக நடைபெறும் தலைவர்170 படப்பிடிப்பு
மேலும் அவர், "நான் இப்போது எந்த வழியையும் உணரவில்லை. ஆனால் இது வலிக்கும் என எனக்கு தெரியும். ஏனென்றால் சில காயங்கள் மிகவும் ஆழமாக ஏற்பட்டுள்ளது." "நான் படப்பிடிப்பு தளத்திலிருந்து மருத்துவமனைக்கு ஊசி போட்டுக் கொள்வதற்காக செல்கிறேன்" என அவர் அந்த வீடியோவில் கூறினார். தலைவர்170 படப்பிடிப்பு ஏற்கனவே கன்னியாகுமரி, திருநெல்வேலி, கேரளா மற்றும் மும்பை உள்ளிட்ட இடங்களில் நடைபெற்ற நிலையில், இப்போது செட் அமைத்து உள்ளரங்கில் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இப்படத்தில் ரஜினிகாந்த் உடன் பல தசாப்தங்களுக்கு பின் ஹிந்தி சூப்பர் ஸ்டார் அமிதாப்பச்சன் இணைந்து நடித்துள்ளார். இது தவிர ஃபஹத் பாசில், ராணா டகுபதி, துஷாரா விஜயன், மஞ்சு வாரியர் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.