'நான் உண்மையைச் சொன்னால் ராதா தான் சிறைக்குச் செல்வார்': நடிகை அம்பிகா பேட்டி
செய்தி முன்னோட்டம்
தமிழ் திரையுலகின் 80-களின் முன்னணி நடிகைகளான சகோதரிகள் அம்பிகா மற்றும் ராதா இடையே சென்னையில் உள்ள 'ஏ.ஆர்.எஸ் கார்டன்' சொத்து விவகாரம் தொடர்பாக கடுமையான மோதல் வெடித்துள்ளது. தன் வீட்டில் இருந்த செக்கை திருடி அம்பிகா மற்றும் அவரது தம்பி ரூ.46 கோடி மோசடி செய்ய முயன்றதாக ராதா சென்னை போலீஸ் கமிஷனரிடம் கண்ணீர் மல்க புகார் அளித்திருந்தார். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த நடிகை அம்பிகா, ராதாவின் குற்றச்சாட்டுகள் முற்றிலும் உண்மைக்கு புறம்பானவை என்று கூறினார். மேலும், தங்களுக்கு ராதா தான் ரூ.97 கோடி தர வேண்டும் என்றும், தன் மீது இப்படி ஒரு பொய்யான மோசடி புகாரை கொடுத்திருப்பது மிகுந்த வேதனை அளிப்பதாகவும் கூறினார்.
அம்பிகா
'என் உழைப்பில் உருவான சொத்து'
ஏ.ஆர்.எஸ் கார்டன் தனது சொந்த உழைப்பில் உருவானது என்றும், அது எம்.ஜி.ஆர் கொடுத்தது என்ற தகவல் தவறானது என்றும் தெரிவித்த அம்பிகா, அச்சொத்திலிருந்து தனது பெயரைத் தன்னிடம் கேட்காமலேயே நீக்கிவிட்டதாகக் குற்றம் சாட்டினார்.
குடும்பச் சொத்துப் பிரச்சனையைத் தீர்ப்பதற்காக ராதாவே செக் கொடுத்ததாகவும், பின்னர் அவரே அதை நிறுத்தியதால் செக் பவுன்ஸ் ஆனதாகவும் கூறினார்.
மேலும், தன் பெயரில் உள்ள தங்க நகைகளையும் ராதாவே வைத்துள்ளதாக குறிப்பிட்டார்.
ராதா கொடுத்த செக் பவுன்ஸ் ஆனதால் அவரே வழக்கு தொடர்ந்திருக்க வேண்டும் என்றும், தான் உண்மையை வெளிப்படுத்தினால் ராதாவே சிறைக்குச் செல்ல வேண்டிய நிலை வரும் என்றும் அம்பிகா எச்சரித்தார்.