"நாளைய வாக்காளர்களே...": உதவித்தொகை வழங்கும் நிகழ்ச்சியில் நடிகர் விஜய் பேச்சு
நடிகர் விஜய், மாவட்டந்தோறும், நடப்பாண்டில் நடைபெற்ற 10, +2 தேர்வில், முதல் மூன்று இடங்களை பெற்ற மாணவ மாணவியரை தேர்வு செய்து, அவர்களுக்கு, இன்று, சென்னையில் பண உதவியும், சான்றிதழும் வழங்கினார். இந்த நிகழ்ச்சிக்காக, மாணவர்கள் பலரும், தங்களது பெற்றோர்களுடன் நேற்று இரவே சென்னை வந்திறங்கினர். அவர்களுக்கு தாங்கும் வசதி, போக்குவரத்து வசதி என அனைத்து ஏற்பாடுகளையும், அகில இந்திய தலைமை தளபதி விஜய் மக்கள் இயக்கம் ஏற்பாடு செய்திருந்தது. இன்று அதிகாலை சென்னை நீலாங்கரை அருகே உள்ள RK கான்வென்ஷன் சென்டரில் விழா நடைபெற்றது. கிட்டத்தட்ட 5000 பேர் இந்த விழாவில் கலந்து கொண்டதாக கூறப்பட்டது. காலை தொடங்கிய இந்த விழாவில் நடிகர் விஜய், மாணவர்களை ஊவிக்கும் விதமாக உரை நிகழ்த்தினார்.
காசு வாங்கிக் கொண்டு ஓட்டுப்போடுவது தவறு
உரையின் போது, "நான் நிறைய ஆடியோ வெளியீட்டு விழா, விருது வழங்கும் விழாக்களில் பேசி இருக்கிறேன். இது போன்ற விழாவில் நான் பேசுவது இதுதான் முதல் முறை என்று நினைக்கிறேன். எனது மனதுக்கு ஏதோ ஒரு பொறுப்புணர்ச்சி வந்தது போல் நான் உணருகிறேன்" எனக்கூறினார். "நீங்கள் தான் நாளைய வாக்காளர்கள். அடுத்தடுத்து நல்ல நல்ல புதிய தலை வர்களை நீங்கள்தான் தேர்ந்தெடுக்க போகிறீர்கள். ஆனால் நமது விரலை வைத்து நமது கண்ணையே குத்துவது என்று கேள்விப்பட்டு இருக்கிறீர்களா? அதுதான் இப்போது நடந்து கொண்டிருக்கிறது. அதைத்தான் இப்போது நாமும் செய்து கொண்டிருக்கிறோம்.காசு வாங்கிட்டு ஓட்டு போடுவது" என சிறிது அரசியலும் பேசினார் விஜய். விழா நிறைவில் மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்கும் விருந்து சாப்பாடும் போடப்பட்டது.