Page Loader
என் அண்ணனை இழந்து விட்டேன்

என் அண்ணனை இழந்து விட்டேன்"- விஜயகாந்துக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்திய பின் சூர்யா பேட்டி

எழுதியவர் Srinath r
Jan 05, 2024
01:23 pm

செய்தி முன்னோட்டம்

தேமுதிக தலைவரும், நடிகருமான விஜயகாந்த் நினைவிடத்தில் மரியாதை செலுத்திய நடிகர் சூர்யா, தன் அண்ணனை இழந்து விட்டதாக கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார். டிசம்பர் 28ஆம் தேதி உடல்நிலை பாதிப்பால் தேமுதிக தலைவர் விஜயகாந்த் மருத்துவமனையில் உயிரிழந்தார். அவரின் உடல் சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது. இந்நிலையில், விஜயகாந்த் உயிரிழந்த போது வெளிநாட்டில் இருந்ததால் அவரின் இறுதிச்சடங்கில் சூர்யா பங்கேற்கவில்லை. நேற்று நாடு திரும்பியவுடன், இன்று காலை தேமுதிக தலைமை அலுவலகத்திற்கு சென்று, விஜயகாந்த் உடலுக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தினார்.

2nd card

விஜயகாந்தை வியந்து பார்த்தேன்: சூர்யா

அஞ்சலி செலுத்திய பின் பத்திரிகையாளர்களை சந்தித்த சூர்யா, தான் ஒரு அண்ணனை இழந்துவிட்டதாக கண்ணீர் மல்க பேசினார். "தொடக்கத்தில் 4-5 திரைப்படங்களின் நடித்த போது எனக்கு புகழ் கிடைக்கவில்லை. பெரியண்ணா திரைப்படத்தின் படப்பிடிப்பின் போது அவருடன் நெருங்கி பழகும் வாய்ப்பு கிடைத்தது. அசைவம் சாப்பிடாமல் விரதம் இருந்தபோது, அசைவம் சாப்பிடவில்லை என்றால் உடம்பில் தெம்பு இருக்காது என கூறி, படப்பிடிப்பு தளத்தில் அவரே எனக்கு ஊட்டி விட்டார். அந்த படப்பிடிப்பின் எட்டு நாட்களும் அவரை நான் வியந்து பார்த்தேன். அவரைப் போன்ற வேறொரு மனிதர் கிடையாது. இறுதிச்சடங்கில் அவரது முகத்தை இறுதியாக பார்க்க முடியாதது எனக்கு வருத்தம் அளிக்கிறது" என தெரிவித்தார்.

3rd card

எல்லோர் நினைவிலும் விஜயகாந்த் இருப்பார்

தொடர்ந்து பேசியவர், "அண்ணனுடைய இழப்பு எனக்கு மிகவும் கஷ்டத்தை ஏற்படுத்துகிறது. அவரை பிரிந்து வாழும் அவரது குடும்பத்தினர், தொண்டர்கள் மற்றும் ரசிகர்களுக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கிறேன். எல்லோர் நினைவிலும் அவர் இருப்பார்" என பேசினார். நடிகர் சங்க கட்டிடத்திற்கு விஜயகாந்த் பெயர் வைக்க வேண்டுமென கோரிக்கை வலுத்து வருவது குறித்து கேட்கப்பட்ட போது, அனைவரும் அந்த முடிவு எடுத்தால் தனக்கு சந்தோஷம் என சூர்யா தெரிவித்தார். நடிகர் சங்க பொருளாளரும், சூர்யாவின் தம்பியுமான நடிகர் கார்த்தி விஜயகாந்த் இறுதிச் சடங்கில் பங்கேற்க முடியாததால், நேற்று அவரது தந்தை சிவகுமார் உடன் வந்து விஜயகாந்துக்கு அஞ்சலி செலுத்தியது குறிப்பிடத்தக்கது.