Loading...
நடிகர் சூர்யாவுக்கு 'தி ஒன்' பட்டம் ஏன்? சீன் இசை வெளியீட்டு விழாவில் நெகிழ்ச்சி விளக்கம்
தி ஒன் பட்டம் ரசிகர்கள் இணைந்த குடும்பத்தின் அடையாளம் என சூர்யா தெரிவித்துள்ளார்.

நடிகர் சூர்யாவுக்கு 'தி ஒன்' பட்டம் ஏன்? சீன் இசை வெளியீட்டு விழாவில் நெகிழ்ச்சி விளக்கம்

எழுதியவர் Vasuki
Nov 03, 2026
12:17 pm

செய்தி முன்னோட்டம்

தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திர நாயகனான நடிகர் சூர்யா, தனக்கு கிடைத்துள்ள 'தி ஒன்' என்ற புதிய பட்டம் குறித்த உண்மையான காரணத்தையும் அதன் ஆழமான பொருளையும் ரசிகர்களிடம் பகிர்ந்து கொண்டுள்ளார். இயக்குநர் ஜித்து மாதவன் இயக்கத்தில் நஸ்ரியா நசீம், நஸ்லென் ஆகியோருடன் இணைந்து சூர்யா நடித்துள்ள 'சீன்' திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழாவில் பேசிய அவர், இப்பட்டம் தனக்கான தனிப்பட்ட அடையாளம் அல்ல என்றும், தனக்கும் தனது அன்பு ரசிகர்களுக்குமான பிரிக்க முடியாத குடும்பப் பிணைப்பின் வெளிப்பாடு என்றும் நெகிழ்ச்சியுடன் விளக்கமளித்துள்ளார். இந்த உணர்வுப்பூர்வமான பேச்சு தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி ரசிகர்களைப் பரவசத்தில் ஆழ்த்தியுள்ளது.

ஒற்றுமை

தி ஒன் என்றால் நான் அல்ல... நாமெல்லாம் ஒன்று!

சூர்யா, இயக்குநர் கார்த்திக் சுப்பராஜின் 'ரெட்ரோ' படத்திற்கு பிறகு தி ஒன் என்று அழைக்கப்படுகிறார்.

இது குறித்து விழாவில் பேசிய அவர், "எனக்கும் தி ஒன் பட்டத்திற்குமான பிணைப்பு மிக ஆழமானது. நான் மட்டும் தி ஒன் அல்ல; நாம் அனைவரும் ஒரே குடும்பம், நாமெல்லாம் ஒன்று என்ற எண்ணமே தி ஒன். "

"இதை என் தனிப்பட்ட அடைமொழியாக நான் கருதவில்லை; நாம் இணைந்தால் மட்டுமே அது முழுமை பெறும்."

"என் மீது நீங்கள் பொழியும் நிபந்தனையற்ற அன்பிற்கு வெறும் நன்றி ஈடாகாது. எப்போதும் உங்களில் ஒருவனாக இருந்து மகிழ்விப்பேன்" என நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

தீபாவளி ரிலீஸ்

நவம்பர் 6-ல் தீபாவளி விருந்தாக சீன் ரிலீஸ்

நடப்பு 2026-ஆம் ஆண்டில் 'கருப்பு' மற்றும் 'விஸ்வநாத் அண்ட் சன்ஸ்' ஆகிய படங்களைத் தொடர்ந்து சூர்யாவின் மூன்றாவது வெளியீடாக 'சீன்' திரைப்படம் தயாராகியுள்ளது.

ரோமாஞ்சம், ஆவேஷம் புகழ் இயக்குநர் ஜித்து மாதவன் இயக்கியுள்ள இப்படத்தில் நஸ்ரியா நசீம் கதாநாயகியாக நடிக்க, இளம் நடிகர் நஸ்லென் தமிழில் அறிமுகமாகிறார்.

நகைச்சுவை, மர்மம் மற்றும் அதிரடி நிறைந்த இந்த முழுநீள பொழுதுபோக்குத் திரைப்படம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வரும் நவம்பர் 6-ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

தனுஷின் ஓம் சாப்டர் 1 திரைப்படம் தனது வெளியீட்டுத் தேதியை தள்ளிவைத்து வழிவிட்டதற்காகவும் சூர்யா இவ்விழாவில் தனுஷுக்கு தனது நன்றியைத் தெரிவித்தார்.

ADVERTISEMENT