ரசிகரிடம் பகிரங்க மன்னிப்பு கேட்ட நடிகர் சூரி; மண்டாடி படப்பிடிப்பு தளத்தில் நடந்தது என்ன?
செய்தி முன்னோட்டம்
தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகராக தொடங்கி முன்னணிக்கு வந்த நடிகர் சூரி, தற்போது கதாநாயகனாகவும் வெற்றிகரமாக வலம் வருகிறார். சமீபத்தில் அவர் நடித்து வரும் மண்டாடி திரைப்படத்தின் படப்பிடிப்பில் நடந்த ஒரு சம்பவத்திற்காக, ரசிகர் ஒருவரிடம் உடனடியாக மன்னிப்பு கேட்டுள்ளார். இது சூரியின் பணிவையும் மனிதநேயத்தையும் வெளிப்படுத்துவதாக ரசிகர்கள் நெகிழ்ந்துள்ளனர். மதிமாறன் புகழேந்தி இயக்கும் 'மண்டாடி' திரைப்படம் மீனவர்களின் வாழ்வியலை மையமாகக் கொண்டு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. படப்பிடிப்பைப் பார்க்கக் கிராம மக்கள் ஆர்வத்துடன் கூடி வந்த நிலையில், ஒரு ரசிகர் சமூக ஊடகத்தில் ஒரு பதிவை வெளியிட்டார். அதில், இரவில் படப்பிடிப்பு பார்க்க வரும் உள்ளூர் மக்களிடம் சூரியின் பவுன்சர்கள் சற்று கடுமையாக நடந்துகொள்வதாகவும், இது வருத்தத்தை அளித்ததாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.
பதில்
சூரியின் பணிவான பதில்
அந்தப் பதிவைப் பார்த்த நடிகர் சூரி, உடனடியாகப் பணிவுடன் பதிலளித்தார். "தம்பி, உங்கள் அன்புக்கும் ஆதரவுக்கும் மனமார்ந்த நன்றி. படப்பிடிப்பு நேரத்தில் ஏற்பட்ட தவறுக்கு மன்னிக்கவும். இது பற்றித் தயாரிப்புக் குழுவுக்கும், பவுன்சர் சகோதரர்களுக்கும் சொல்கிறேன். இனிமேல் எங்கள் அணியெல்லாம் அதிக கவனத்துடன் இருப்பார்கள். எப்போதும் போல நீங்கள் தரும் அன்பே எங்களுக்குப் பெரிய பலம்." என்று அவர் பதிலளித்தார். சில நடிகர்கள் இது போன்ற கருத்துகளைப் புறக்கணிக்கும் நிலையில், ரசிகரின் உணர்வைப் புரிந்துகொண்டு சூரி உடனடியாக மன்னிப்புக் கேட்டது அவரது எளிமையைப் பறைசாற்றுவதாக ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர். நகைச்சுவையில் மட்டுமின்றி, மனிதநேயத்திலும் சூரி முன்னணியில் இருப்பதை இந்தச் சம்பவம் உறுதி செய்துள்ளது.