'Bro Club' பட விவகாரம்: தயாரிப்பாளர் ஸ்ருதி நல்லப்பாவிற்கு எதிராக நடிகர் ரவி மோகன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு
செய்தி முன்னோட்டம்
பிரபல நடிகர் ரவி மோகன், தனது நடிப்பில் உருவாகி வரும் 'ப்ரோ கிளப்' திரைப்படத்தின் தயாரிப்பாளர் ஸ்ருதி நல்லப்பாவிற்கு எதிராக சென்னை உயர் நீதிமன்றத்தில் அவதூறு வழக்குத் தொடர்ந்துள்ளார். நெட்ஃபிளிக்ஸ் நிறுவனம் மற்றும் தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை போன்ற திரையுலக அமைப்புகளுக்கு மின்னஞ்சல்களை அனுப்பி தனது பெயருக்கும் நற்பெயருக்கும் களங்கம் விளைவிப்பதாக அவர் குற்றம்சாட்டியுள்ளார். ரவி மோகன் தாக்கல் செய்த இந்த வழக்கை விசாரித்த நீதிபதி கே. கோவிந்தராஜன் திலகவதி, தயாரிப்பாளர் ஸ்ருதி நல்லப்பாவிற்கு (மிராக்கிள் மூவிஸ்) நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளார். ரவி மோகன் குறித்து அவதூறான கருத்துக்களையோ அறிக்கைகளையோ வெளியிட தடை விதிக்கக் கோரும் இந்த மனுவிற்கு, ஆகஸ்ட் 25-க்குள் ஸ்ருதி நல்லப்பா பதிலளிக்க வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
விவரம்
'ப்ரோ கிளப்' பிரச்சனை தொடங்கியது எப்படி?
'ப்ரோ கோட்' என்ற பெயரில் தொடங்கப்பட்ட இத்திரைப்படத்தில் ரவி மோகன், எஸ்.ஜே. சூர்யா மற்றும் அர்ஜுன் அசோகன் ஆகியோர் நடிக்க, மிராக்கிள் மூவிஸ் நிறுவனம் தயாரிப்பதாக இருந்தது.
பின்னர், இப்படத்தைத் தயாரிக்கும் பொறுப்பை ரவி மோகனின் சொந்த தயாரிப்பு நிறுவனமான 'ரவி மோகன் ஸ்டுடியோஸ்' ஏற்றுக்கொண்டது. இதற்கு மிராக்கிள் மூவிஸ் நிறுவனமும் முதலில் சம்மதம் தெரிவித்தது.
பட தயாரிப்பின் ஆரம்பக் கட்டத்தில் ஏற்பட்ட செலவினங்களை ஈடுசெய்வது தொடர்பாக இரு தரப்பிற்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது.
வாதம்
வழக்கறிஞரின் காரசார வாதம்
நீதிமன்றத்தில் ரவி மோகன் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஆர். பார்த்தசாரதி, "பணப் பிரச்சனை தொடர்பாகத் தயாரிப்பாளர் சட்டப்பூர்வமான வழியை அணுகியிருக்கலாம். அதை விடுத்து நெட்ஃபிளிக்ஸ் உள்ளிட்ட மூன்றாம் தரப்பினருக்குக் கடிதங்கள் எழுதி ரவி மோகனின் நற்பெயரை கெடுக்க முயல்வது சட்டப்படி தவறானது" என்று வாதிட்டார்.
தயாரிப்பாளரின் பதில் மனு வந்த பிறகே இவ்வழக்கின் அடுத்தகட்ட நகர்வுகள் தெரியவரும்.