பணத்துக்காக "படைப்புக்கு" துரோகம் செய்பவரல்ல அமீர்- ஞானவேல் ராஜா பேச்சுக்கு பொன்வண்ணன் கண்டனம்
பருத்திவீரன் திரைப்படத்தின் இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் இடையே நடைபெற்று வரும் மோதல் குறித்து, நடிகரும் அப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தவருமான பொன்வண்ணன் கருத்து தெரிவித்துள்ளார். இயக்குனர் அமீருடன் தனக்கு ஏற்பட்டுள்ள மோதல் குறித்து நேர்காணலில் பேசிய தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா, அமீரை வேலை தெரியாதவர் என்றும், திருடன் என்றும் விமர்சித்திருந்தார். இதற்கு சினிமா துறையில் பல்வேறு தரப்பினரிடம் இருந்து கண்டனங்கள் வந்த நிலையில், தற்போது பொன்வண்ணன் அறிக்கை வெளியிட்டுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், பருத்திவீரன் திரைப்படம் குறித்த தயாரிப்பாளர் ஞானவேலின் ஊடகப் பேட்டியை பார்த்தேன். நடிகன் என்பதையும் தாண்டி, அப்பிடத்தில் பல்வேறு நிலைகளில் பங்காற்றியவன், என்ற வகையில் சில விளக்கங்களை தர கடமைப்பட்டுள்ளேன்.
"இரண்டாம் கட்ட படப்பிடிப்பிற்கு கடன் வாங்கி செலவு செய்த அமீர்"
படம் தொடங்கியது முதலே, தயாரிப்பாளருக்கும் இயக்குனருக்கும் இடையே கருத்து வேறுபாடு நிலவி வந்தது. இதனால், படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு தள்ளி போய்க்கொண்டிருந்தது. இதற்கான காரணங்கள் அப்போது எங்களுக்கு முழுமையாக தெரியவில்லை. இரண்டாம் கட்ட படப்பிடிப்பு அமீர் அவர்கள் பொறுப்பேற்று, பல இடத்தில் கடன் வாங்கி படப்பிடிப்புக்கான செலவுகளை செய்தார் என்பதை நான் அறிவேன். பல கட்டங்களாக படப்பிடிப்பு நடந்தது. படத்தின் ஒவ்வொரு காட்சியையும் திருப்தி அடையும்வரை எடுத்துக் கொண்டே இருந்தார். இதற்காக ஆகும் செலவு குறித்து நாங்கள் சுட்டிக் காட்டிய போது, எங்களை சமாதானப்படுத்திவிட்டு, டப்பிங், எடிட்டிங் உள்ளிட்ட எந்த நிலைகளிலும் சமரசம் செய்யாமல், இதே மனநிலையுடன் வேலையை பார்த்தார்.
"அமீரின், அர்ப்பணிப்பும், உழைப்பும் மதிக்கத்தக்கதாக இருந்தது"
பல வருடங்கள் சினிமா துறையில் பயணித்து வந்த எனக்கு, அவரின் அர்ப்பணிப்பும், உழைப்பு மதிக்கத்தக்கதாக இருந்தது. இதால்தான், பணத்திற்காக தன் "படைப்புக்கு" துரோகம் செய்பவரல்ல அமீர் என்பதை, என்னால் உறுதியாக சொல்ல முடியும். படம் வெளியாகி இந்திய சினிமா மற்றும் உலக சினிமாவிலும் தொழில்நுட்ப ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் மாபெரும் வெற்றி பெற்றது. மேலும், படம் பல்வேறு விருதுகளையும் வென்றது. படம் ஆரம்பிக்கப்பட்ட காலத்திலிருந்து, அமீர் மற்றும் ஞானவேலுக்கிடையே, பொருளாதாரம் சார்ந்த முரண்பாடுகள் இருந்து வந்தது. இப்போது, சினிமா துறை சார்ந்த பல்வேறு சங்கங்கள் தலையிட்டும் பிரச்சனை தீர்க்கப்படாமல் உள்ள நிலையில், தயாரிப்பாளர் ஞானவேல் தன் பக்க நியாயத்தை சொல்ல முழு உரிமை உண்டு. ஆனால் அதில் ஒரு நியாயம் இருக்க வேண்டும்.
"பேட்டியில் உங்கள் உடல் மொழியும், பேச்சு திமிரும் வக்கிரமாக இருந்தது"
உலகமே அங்கீகரித்த படைப்பையும், அதன் படைப்பாளியையும் உங்கள் தனிப்பட்ட லாபங்களுக்காக, திருடன், வேலை தெரியாதவர் என கொச்சைப்படுத்துவது நியாயம் அல்ல. அந்த பேட்டியில் முழுவதும் உங்கள் உடல் மொழியும், பேச்சு திமிரும் வக்கிரமாக இருந்தது. தங்கள் தயாரிப்பில் வந்த இருட்டு அறையில் முரட்டு குத்து திரைப்படத்தை அளவுகோலாக வைத்து, பருத்திவீரணையும் அதன் படைப்பாளரையும் எடை போட்டு விட்டீர்களே! வேண்டாம் இந்த தரம் தாழ்ந்த மனநிலை!, இனியும் உங்களுக்கிடையேயான பிரச்சனைகளை நேர்மையாக பேசி அணுகி தீர்வு காணுங்கள். பருத்திவீரன் தொடங்கப்பட்ட காலத்தில் அனைவரது இடத்திலும் இருந்த நட்பும், உறவும் மீண்டும் மலர வேண்டும் என ஆசைப்படுகிறேன், என அவர் வெளியிட்டு இருந்த அறிக்கையில் எழுதப்பட்டிருந்தது.