Loading...
தான் படித்த பள்ளிக்கு 3 அடுக்கு கட்டிடம் கட்டி தந்த நடிகர் தனுஷ்: சாலிகிராமம் தாய் சத்யா பள்ளியில் திறப்பு விழா
பள்ளிக்கு 3 அடுக்கு கட்டிடம் கட்டி தந்த நடிகர் தனுஷ்

தான் படித்த பள்ளிக்கு 3 அடுக்கு கட்டிடம் கட்டி தந்த நடிகர் தனுஷ்: சாலிகிராமம் தாய் சத்யா பள்ளியில் திறப்பு விழா

எழுதியவர் Venkatalakshmi V
Aug 05, 2026
11:57 am

செய்தி முன்னோட்டம்

திரையுலகில் முன்னணி நடிகராக உலா வரும் தனுஷ், நடிப்பையும் தாண்டி பல்வேறு சமூக நல உதவிகளையும், பொதுச்சேவைகளையும் தொடர்ந்து செய்து வருகிறார். தற்போது தான் படித்த பள்ளிக்கு புதிய கட்டிடம் கட்டித் தந்து தனது நன்றியுணர்வை வெளிப்படுத்தியுள்ளார். சென்னை சாலிகிராமத்தில் அமைந்துள்ள தாய் சத்யா மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில்தான் நடிகர் தனுஷ் தனது 10-ஆம் வகுப்பு வரை பயின்றார். பள்ளியின் உள்கட்டமைப்பை மேம்படுத்தும் நோக்கில், அங்கு ஏற்கனவே இருந்த தற்காலிக மேற்கூரைகளை அகற்றிவிட்டு, சொந்த செலவில் மூன்று தளங்களைக் கொண்ட நவீன புதிய கட்டிடத்தை தனுஷ் கட்டிக் கொடுத்துள்ளார். தனுஷின் இந்த உதவியைப் பாராட்டும் வகையில் பள்ளி நிர்வாகம் அக்கட்டிடத்திற்கு 'தனுஷ் பிளாக்' எனப் பெயரிட்டுள்ளது.

பங்கேற்ற பிரபலங்கள்

திறப்பு விழாவில் பங்கேற்ற பிரபலங்கள்

இந்த புதிய கட்டிடத்தின் திறப்பு விழா மிகச் சிறப்பாக நடைபெற்றது.

இதில் நடிகர் தனுஷ், அவரது சகோதரிகள், பள்ளிப் பருவ தோழர்கள் மற்றும் தனுஷின் வகுப்புத் தோழரும் பிரபல ஒளிப்பதிவாளருமான ஏ. குமரன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

விழாவில் பேசிய ஒளிப்பதிவாளர் ஏ. குமரன்,"நானும் தனுஷும் எனது மனைவியும் இந்தப் பள்ளியில்தான் 10-ஆம் வகுப்பு வரை ஒன்றாகப் படித்தோம். பின்னர் 'வேலையில்லா பட்டதாரி', 'தங்கமகன்' போன்ற படங்களில் தனுஷுடன் ஒளிப்பதிவாளராக பணியாற்றும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. பள்ளிக் கட்டிடத்தின் நிலையை அறிந்து தனுஷ் தானாகவே முன்வந்து இந்த மிகப்பெரிய உதவியைச் செய்துள்ளார். மேலும், பள்ளியின் பிற கட்டிடங்களைச் சீரமைக்கவும், காலியாக உள்ள இடங்களில் கூடுதல் கட்டிடங்களைக் கட்டத் தருவதாகவும் அவர் உறுதியளித்துள்ளார்" எனக் கூறினார்.

ADVERTISEMENT