ஆக்க்ஷன் கிங் அர்ஜுனின் மகளுக்கு திருமணமா?
கோலிவுட்டின் 'ஆக்ஷன் கிங்' என்றால் அது அர்ஜுன் தான். இவரின் மகள் ஐஸ்வர்யா, 'பட்டத்து யானை' என்ற திரைப்படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆனார். அர்ஜுனிடம் அசிஸ்டன்ட் டைரக்டராக பணியாற்றியவர் நடிகர் விஷால். அதனால் தான், விஷாலுடன் ஜோடியாக நடிக்க அர்ஜுன் தனது மகளுக்கு அனுமதி தந்ததாக அப்போது பரவலாக பேசப்பட்டது. ஆனால் அந்த படத்திற்கு பிறகு தமிழ் சினிமாவில் அவருக்கு பெரிதாக வாய்ப்பு கிடைக்க வில்லை. இந்நிலையில் அவரது தாய் மொழியான கன்னடத்தில், அர்ஜூனே இயக்க, ஐஸ்வர்யாவை அங்கே அறிமுகம் செய்தார். அங்கும் பெரிதாக அவரால் ஜொலிக்க முடியவில்லை.
காதலில் விழுந்த ஐஸ்வர்யா?
இந்நிலையில், ஐஸ்வர்யா, பிரபல காமெடி நடிகர் தம்பி ராமையாவின் மகனான உமாபதியை காதலிப்பதாகவும், இவர்கள் இருவரும் விரைவில் திருமணம் செய்யவிருப்பதாகவும் சமீபத்தில் ஒரு செய்தி வைரலாகி வருகிறது. இது தொடர்பாக தம்பி ராமையா, "இருவரும் நீண்ட நாட்களாக காதலித்து வருகிறார்கள். இதையடுத்து எனது மனைவியுடன் சென்று அர்ஜுனை சந்தித்து பேசினோம். அவரும் திருமணத்துக்கு சம்மதம் தெரிவித்தார். நவம்பர் மாதம் திருமண நிச்சயதார்த்தம் நடத்த இருக்கிறோம். அப்போது திருமண தேதியை முடிவு செய்வோம்" என கூறியதாக செய்திகள் மேலும் தெரிவிக்கின்றன. உமாபதியும் ஒரு நடிகர். 'அதாகப்பட்டது மகாஜனங்களே', 'மணியார் குடும்பம்', 'தண்ணி வண்டி', 'திருமணம்' ஆகிய படங்களில் கதாநாயகனாக நடித்துள்ளார்.