Page Loader
விவாகரத்து வழக்கில் திருப்பம்: நடிகர் ஜெயம் ரவியிடம் மாதம் ரூ.40 லட்சம் ஜீவனாம்சம் கோரிய ஆர்த்தி
ரூ.40 லட்சம் ஜீவனாம்சம் வழங்க வேண்டும் என ஆர்த்தி கோரியுள்ளார்

விவாகரத்து வழக்கில் திருப்பம்: நடிகர் ஜெயம் ரவியிடம் மாதம் ரூ.40 லட்சம் ஜீவனாம்சம் கோரிய ஆர்த்தி

எழுதியவர் Venkatalakshmi V
May 21, 2025
03:05 pm

செய்தி முன்னோட்டம்

நடிகர் ரவி மோகன் (எ) ஜெயம் ரவி மற்றும் அவரது மனைவி ஆர்த்தி இடையிலான விவாகரத்து வழக்கில் புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. நடிகர் ரவி, தனக்கு மாதம் ரூ.40 லட்சம் ஜீவனாம்சம் வழங்க வேண்டும் என ஆர்த்தி தற்போது கோரியுள்ளார். இதனைத்தொடர்ந்து இரு தரப்பும் ஜூன் 12ஆம் தேதிக்குள் பதிலளிக்குமாறு சென்னை குடும்ப நல நீதிமன்றம் இந்த வழக்கை ஒத்திவைத்துள்ளது. 2009ம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்ட ஜெயம் ரவி-ஆர்த்தி தம்பதி, 15 ஆண்டு திருமண வாழ்க்கையை முறித்துக்கொள்ள நீதிமன்றத்தை நாடியுள்ளனர். கடந்த சில வருடங்களாக கருத்து வேறுபாடுகள் காரணமாக இருவரும் தனித்தனியாக வாழ்ந்து வந்த நிலையில், நடிகர் ஜெயம் ரவி விவாகரத்துக்கான மனுவை நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்தார்.

ஜீவனாம்சம்

ஜீவனாம்சம் கோரிய ஆர்த்தி ரவி

வழக்கின் விசாரணை நீதிபதி தேன்மொழி முன்னிலையில் நடைபெற்று வந்த நிலையில், சமரச பேச்சுவார்த்தைக்கு பலமுறை வாய்ப்பு அளிக்கப்பட்டது. சமரசம் முடியாத நிலையில், இருவரும் தனித்தனியாக வழக்கறிஞர்களுடன் மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜராயினர். மனைவியிடம் இருந்து விவாகரத்து வேண்டும் நடிகர் ரவி எனக் கோரி மனு தாக்கல் செய்த நிலையில், மனைவி ஆர்த்தி சேர்ந்து வாழவேண்டும் எனக்கூறியிருந்தார். இந்த நிலையில்தான் தனது ஜீவனாம்சக் கோரிக்கையை தற்போது ஆர்த்தி முன்வைத்துள்ளார். அதன்படி, நடிகர் ரவி மோகன் தனது குடும்பச் செலவுகளுக்கு மாதம் ரூ.40 லட்சம் அளிக்க வேண்டும் எனத்தெரிவித்துள்ளார். அதோடு, இரு மைனர் குழந்தைகளையும் ரவிமோகனே பராமரிக்க அவருக்கு உத்தரவிட வேண்டும் எனவும் தனது மனுவில் கோரியுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.