இயக்குநர் லோகேஷ் கனகராஜுடன் அமீர் கான் இணைவது உறுதியானது; புதிய திரைப்படம் குறித்த தகவல் வெளியீடு
செய்தி முன்னோட்டம்
பாலிவுட்டின் முன்னணி நடிகர் அமீர் கான், இயக்குநர் லோகேஷ் கனகராஜுடன் இணைந்து ஒரு புதிய படத்தில் பணியாற்றுவதை உறுதிப்படுத்தியுள்ளார். சமீபத்தில் ஒரு நேர்காணலில் பேசிய அவர், லோகேஷ் கனகராஜ் விரைவில் மும்பை வந்து கதை விவரிக்க உள்ளதாகவும், இப்போதைக்கு இந்தக் கூட்டு முயற்சி உறுதி செய்யப்பட்டுள்ளது என்றும் தெரிவித்துள்ளார். திரைத்துறையில் தனது திட்டம் குறித்துப் பேசிய அமீர் கான், "ஆண்டுக்கு ஒரு படம் நடிக்க வேண்டும் என்பதே எனது நோக்கம். உணர்வுபூர்வமாகவும் நான் அதையே விரும்புகிறேன். நான் ஒரு கதை பிடித்து, அதில் பணியாற்ற ஆரம்பிக்கும்போது, அது முடிவதற்குள் அதிக நேரம் எடுக்கும். அதனால், ஆண்டுக்கு ஒரு படத்தில் நடிக்க முயற்சிப்பேன் என்று கூறியிருந்தேன்." என்று கூறினார்.
கூலி
கூலி'யில் நடிக்க ஒப்புக்கொண்டதன் காரணம்
அமீர் கான் கடைசியாக லோகேஷ் இயக்கத்தில், ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான கூலி திரைப்படத்தில் ஒரு சிறப்புத் தோற்றத்தில் நடித்திருந்தார். படத்தின் கடைசி 15 நிமிடங்களில் ரஜினிகாந்துடன் அவர் மோதும் சண்டைக் காட்சி ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்தது. கூலி படத்தில் தஹா என்ற கதாபாத்திரத்தில் நடிக்கத் தான் உடனடியாக ஒப்புக்கொண்டதற்கான காரணத்தையும் 60 வயதான அமீர் கான் பகிர்ந்துகொண்டார். "அதில் நடித்தது எனக்கு மிகவும் பிடித்திருந்தது. நான் ரஜினி சாரின் மிகப்பெரிய ரசிகன். அவர் மீது எனக்கு மிகுந்த மரியாதையும் அன்பும் உண்டு. அதனால் லோகேஷ் என்னிடம் கேட்டபோது, சம்மதம் சொன்னேன்." என்று அவர் தெரிவித்தார். லோகேஷ் கனகராஜ் மற்றும் அமீர் கானின் புதிய திரைப்படத்திற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.