Zomato பயனர்களுக்கான நற்செய்தி, இப்போது டெலிவரி ஹிஸ்டரியிலிருந்து உங்கள் ஆர்டர்களை டெலீட் செய்யலாம்
இந்தியாவில் பரவலாகப் பயன்படுத்தப்படும் உணவு விநியோக செயலியான சோமாட்டோ, பயனர்கள் தங்கள் ஆர்டர் வரலாற்றிலிருந்து தனிப்பட்ட ஆர்டர்களை நீக்க அனுமதிக்கும் புதிய அம்சத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. 2023 ஆம் ஆண்டு வாடிக்கையாளரின் கோரிக்கைக்கு பதிலளிக்கும் வகையில் இந்த அம்சம் அறிமுகப்படுத்தப்பட்டது. Zomato இன் CEO தீபிந்தர் கோயல், சமூக ஊடக தளமான X இல் 'டெலிட் ஆர்டர்' வசதியை இன்று முதல் அறிமுகப்படுத்துவதாக அறிவித்தார்.
ஆர்டர் வரலாற்றை நீக்குவதற்கான பயனரின் கோரிக்கை
2023 இல் கரண் சிங் என்ற பயனரிடமிருந்து 'டெலீட் ஆர்டர்' அம்சத்திற்கான கோரிக்கை வந்தது. கரண் சிங் தனது ஆர்டர் வரலாற்றை நீக்க முடியாததால் Zomato ஐப் பயன்படுத்துவதை நிறுத்த முடிவு செய்தார். இந்த ஹிஸ்டரி மூலமாக தான் இரவுநேரங்களில் திருட்டுத்தனமாக வாங்கி சாப்பிடும் பழக்கம், அவரது மனைவிக்கு தெரிய வந்ததாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது. "Be bye Zomato அல்லது ஆர்டர் ஹிஸ்டரியை டெலீட் செய்யுங்கள்" என்று கரண் சிங் கூறியது, நிறுவனத்தின் கவனத்திற்கு வந்தது.
Zomatoவின் பதில் மற்றும் புதிய அம்சம் அறிமுகம்
சோமாட்டோ ஆரம்பத்தில் கரண் சிங்கின் கோரிக்கைக்கு நகைச்சுவையுடன் பதிலளித்திருந்தது. இருப்பினும், நிறுவனம் பின்னர் அவரது கவலையை தீர்க்க நடவடிக்கை எடுத்தது. 'டெலீட் ஆர்டர்' அம்சத்தை செயல்படுத்துவது ஒரு சிக்கலான செயல் என்று கோயல் ஒப்புக்கொண்டார். ஏனெனில் இது "பல அமைப்புகள் மற்றும் மைக்ரோ சர்வீஸ்களை சார்ந்தது" மற்றும் முன்னுரிமை மற்றும் மேம்பாடு தேவை எனக்கூறினார். இந்த புதிய அம்சத்தின் வெளியீடு தற்போது இயங்குதளம் முழுவதும் நடைமுறைக்கு வருகிறது. இந்த முன்மொழியப்பட்ட அம்சம் பயனர்கள் முந்தைய ஆர்டர்களில் இருந்து உணவுப் பொருட்களை டெலீட் செய்ய அனுமதிக்கும். தேதி மற்றும் டெலிவரி விவரங்களுடன் முழுமையான ஆர்டர் வரலாற்றை வெளிப்படுத்தாது.