ரூ.2 ப்ளாட்ஃபார்ம் கட்டணம் வசூலிக்கவிருப்பதாக அறிவித்திருக்கும் ஸோமாட்டோ
2023-24 நிதியாண்டிற்கான முதல் காலாண்டு முடிவுகளை சமீபத்தில் வெளியிட்டது ஸோமாட்டோ நிறுவனம். இதுவரை காலாண்டு மற்றும் நிதிாயண்டு முடிவுகளில் நஷ்டத்தை மட்டுமே பதிவு செய்து வந்த அந்நிறுவனம். முதல் காலாண்டு முடிவில் முதல் முறையாக லாபத்தைப் பதிவு செய்திருந்தது. 2023-23 நிதியாண்டின் முதல் காலாண்டில் ரூ.2 கோடி லாபத்தைப் பதிவு செய்திருந்தது ஸோமாட்டோ நிறுவனம். இது பெரிய லாபம் இல்லை எனினும், அடுத்தடுத்த கட்டங்களுக்கான முதல் படியாக இதனை பார்க்கிறது ஸோமாட்டோ. இதனைத் தொடர்ந்து, தற்போது புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருக்கிறது அந்நிறுனம். அதன்படி, இனி ஸோமாட்டோவின் மூலம் செய்யப்படும் டெலிவரிக்களுக்கு ப்ளாட்ஃபார் கட்டணம் ஒன்றை வசூலிக்கவிருப்பதாகத் தெரிவித்திருக்கிறது அந்நிறுவனம்.
எதற்கு ப்ளாட்ஃபார்ம் கட்டணம்?
அந்நிறுவனம் தெரிவித்த தகவல்களின் படி, பரீட்சார்த்த முயற்சியாக ஸோமாட்டோவின் மூலம் மேற்கொள்ளப்படும் டெலிவரிக்களுக்கு ரூ.2 ப்ளாட்ஃபார்ம் கட்டணமாக பெறவிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது ஸோமாட்டோ டெலிவரிக்களுக்கு மட்டும், ப்ளிங்க்இட்டிற்கு அல்ல என்பதையும் தெளிவுபடுத்தியிருக்கிறது அந்நிறுவனம். இந்த கட்டணமானது, ஸோமாட்டோ தொடர்ந்து இயங்குவதற்கு உதவியாக இருக்கும் எனவும் அந்நிறுவனம் தெரிவித்திருக்கிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு, முதல் முறையாக இது போன்ற கட்டணத்தை ஸோமாட்டோவின் போட்டியாளரான ஸ்விக்கி நிறுவனம் வசூலிக்கத் தொடங்கியது. தற்போது அதனைத் தொடர்ந்து ஸோமாட்டோ நிறுவனமும் ப்ளாட்ஃபார்ம் கட்டணத்தை வசூலிக்கவிருப்பதாக அறிவித்திருக்கிறது. எந்த விதமாக இந்த ப்ளாட்ஃபார்ம் கட்டண வசூலிப்பை அந்நிறுவனம் அமல்படுத்தவிருக்கிறது என்பதைப் பொருத்திருந்து தான் பார்க்க வேண்டும்.