படிப்பு தேவையில்லை! திறன் இருந்தால் போதும்! வேலை தருகிறாராம் Zoho நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு
செய்தி முன்னோட்டம்
இந்திய மாணவர்களின் உயர்கல்வி மீதான அழுத்தத்தைக் குறைக்க வேண்டும் என்றும், பட்டப்படிப்பு இல்லாமல் திறமையுள்ளவர்களை வேலைக்கு அமர்த்த Zoho தயாராக இருப்பதாகவும் அந்நிறுவனத்தின் CEO ஸ்ரீதர் வேம்பு வெளிப்படையாக தெரிவித்துள்ளார். Zoho நிறுவனத்தில் எந்தவொரு பணிக்கும் கல்லூரியில் பட்டம் பெற்றிருக்க வேண்டிய அவசியம் இல்லை என ஸ்ரீதர் வேம்பு திட்டவட்டமாகக் கூறியுள்ளார். ஒருவேளை மேலாளர்கள் யாராவது பட்டப்படிப்பைக் கட்டாயமாக்கி வேலைக்கான அறிவிப்பை வெளியிட்டால், அதனை நீக்கச் சொல்லி HR மூலம் அறிவுறுத்தல் வழங்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். அமெரிக்காவில் உயர் கல்விக்கான அழுத்தம் குறைந்து, திறன் சார்ந்த வேலைவாய்ப்புகள் அதிகரிப்பதைச் சுட்டிக்காட்டி, "இந்தியப் பெற்றோர்கள் மற்றும் முன்னணி நிறுவனங்கள் இந்தக் கலாச்சார மாற்றத்திற்கு கவனம் செலுத்த வேண்டும்," என்று அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
விளக்கம்
பட்டம் பெறாதவர்களை பணிக்கு அமர்த்துவதன் காரணம்
பட்டம் பெறாமல் திறமையுடன் வேலைக்குச் சேர்வது, மாணவர்கள் பெரும் தொகையை கடனாக வாங்கிப் படிக்கும் நிலையை தவிர்க்க உதவும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். தான் தற்போது தனது அலுவலகம் அமைத்துள்ள தென்காசியில், சராசரியாக 19 வயதுள்ள இளம் ஊழியர்களுடன் பணிபுரிவதாகவும், அவர்களின் ஆற்றல் தன்னைப் பற்றிக்கொள்கிறது என்றும் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.
மற்ற நிறுவனங்கள்
வேறு சில பெரிய நிறுவனங்களும் இந்த கொள்கையை பின்பற்றத் தொடங்கியுள்ளன
இது ஒரு புதிய உலகளாவிய போக்காக இருந்தாலும், இந்தியாவில் சில நிறுவனங்கள் முக்கியமாகத் தொழில்நுட்பத் துறையில் இதற்கான வாய்ப்புகளை வழங்குகின்றன. கூகிள் நிறுவனம் இந்தியாவில் பல ஆண்டுகளாகவே, முறையான பட்டம் இல்லாத, ஆனால் அசாத்தியத் திறன் கொண்டவர்களை பணியமர்த்தியுள்ளது. Google Career Certificates போன்ற சான்றிதழ் திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்தப் படிப்புகளை முடிப்பவர்கள் பட்டதாரிகளுக்கு இணையான வேலையைப் பெற முடியும் என்று நிறுவனம் நம்புகிறது. ஐபிஎம் தனது உலகளாவிய திட்டமான 'Apprenticeship Program' மூலம் பட்டம் இல்லாதவர்களுக்கும் பணி வாய்ப்புகளை வழங்குகிறது. அக்சென்ச்சர் போன்ற பெரிய தொழில்நுட்ப நிறுவனங்கள் நேரடியாக 'பட்டப்படிப்பு தேவையில்லை' என்று கூறாவிட்டாலும், சில பிரிவுகளில் திறனுக்கே அதிக முக்கியத்துவம் கொடுக்கின்றன.