
அமெரிக்க-இங்கிலாந்திற்கு இடையே கையெழுத்தான வர்த்தக ஒப்பந்தம்!
செய்தி முன்னோட்டம்
உலகப் பொருளாதாரத்தை அமெரிக்காவிற்கு சாதகமாக மறுவடிவமைக்க, புதிய இறக்குமதி வரிகளை விதித்து உலகப் பொருளாதாரத்தையே சீர்குலைத்த டிரம்ப், நேற்று மிகப்பெரிய பொருளாதார நாட்டுடன் ஒப்பந்தம் கையெழுத்து ஆவதை குறித்து சூசகமாக தெரிவித்திருந்தார்.
இதனையடுத்து இன்று, ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், ஐக்கிய இராச்சியத்துடன் ஒரு வர்த்தக ஒப்பந்தத்தை அறிவித்தார்.
இது "பலவற்றில் முதலாவதாக" இருக்கும் என்று குறிப்பிட்டார்.
பிரிட்டிஷ் பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் இந்த அறிவிப்புக்காக தொலைபேசி மூலம் இணைந்தார்.
இரு தலைவர்களும் இந்தத் திட்டத்தை ஒரு "திருப்புமுனை ஒப்பந்தம்" என்று அறிவித்தனர்.
எனினும், வெள்ளை மாளிகையின் தகவல் அறிக்கையில், இங்கிலாந்து இறக்குமதிகளுக்கு 10% வரி தொடர்ந்து இருக்கும் என்றும், ஆனால் அங்கிருந்து வரும் கார்களுக்கு குறைந்த விகிதத்தில் வரி விதிக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.
விவரங்கள்
அமெரிக்க இறக்குமதி வரிகளுக்கு இடையே ஏற்பட்ட ஒப்பந்தம்
ஏப்ரல் மாதத்தில், ஐரோப்பிய ஒன்றியம் உட்பட 57 வர்த்தக கூட்டாளிகளிடமிருந்து வரும் பொருட்களுக்கு 50% வரை பரஸ்பர வரிகளை டிரம்ப் விதித்தார். பின்னர் பேச்சுவார்த்தைகளுக்கு அவற்றை இடைநிறுத்தினார்.
இந்த பொருளாதார முடிவுகளுக்கு இடையே தற்போது இந்த ஒப்பந்த முடிவு எட்டப்பட்டுள்ளது.
இது அமெரிக்கப் பொருட்களின் மீதான சராசரி பிரிட்டிஷ் வரிகளை 5.1 சதவீதத்திலிருந்து 1.8 சதவீதமாகக் குறைக்கிறது.
"இது எங்களுக்கு ஒரு மிகப்பெரிய சந்தையைத் திறக்கிறது," என்று டிரம்ப் கூறினார்.
இதனால், பிரிட்டிஷ் தயாரிப்பான ரோல்ஸ் ராய்ஸ் என்ஜின்கள் அமெரிக்காவில் வரி இல்லாத சேவையில் நுழையும் என்றும், பிரிட்டிஷ் விமான நிறுவனங்கள் போயிங் விமானங்களுக்கு $10 பில்லியன் மதிப்புள்ள புதிய ஆர்டரை வழங்கும் என்று அமெரிக்க வர்த்தக செயலாளர் ஹோவர்ட் லுட்னிக் கூறினார்.