Loading...
UPI பண பரிவர்த்தனையில் புதிய மாற்றம்: ஆன்லைன் மோசடிகளை தடுக்க 'Yes/No' உறுதிப்படுத்தும் முறை விரைவில்
UPI பாப்-அப் வசதியை அறிமுகப்படுத்த வங்கிகள் இந்திய ரிசர்வ் வங்கிக்கு பரிந்துரைத்துள்ளன

UPI பண பரிவர்த்தனையில் புதிய மாற்றம்: ஆன்லைன் மோசடிகளை தடுக்க 'Yes/No' உறுதிப்படுத்தும் முறை விரைவில்

எழுதியவர் Venkatalakshmi V
Aug 03, 2026
12:01 pm

செய்தி முன்னோட்டம்

இந்தியாவில் யுபிஐ மூலம் நடைபெறும் எண்ணற்ற டிஜிட்டல் பண பரிவர்த்தனைகளில் ஆன்லைன் மோசடிகள் அதிகரித்து வருவதைத் தொடர்ந்து, அதனை தடுக்கும் வகையில் 'Yes/No' எனப்படும் புதிய உறுதிப்படுத்தும் முறை பாப்-அப் வசதியை அறிமுகப்படுத்த வங்கிகள் இந்திய ரிசர்வ் வங்கிக்கு பரிந்துரைத்துள்ளன. தற்போது UPI மூலம் பணம் அனுப்பும்போது PIN எண்ணை உள்ளீடு செய்தவுடன் பரிவர்த்தனை உடனடியாக முடிவடைந்துவிடும். ஆனால் புதிய பரிந்துரையின்படி, சந்தேகத்திற்குரிய அல்லது அதிக அபாயம் கொண்ட பரிவர்த்தனைகளை கண்டறிந்தால், உங்கள் போன் திரையில் "இந்த நபருக்கு பணத்தை அனுப்ப நிச்சயமாக விரும்புகிறீர்களா?" என்ற 'Yes/No' பாப்-அப் தோன்றும். பயனர் 'Yes' என்பதை தேர்வு செய்தால் மட்டுமே பணப் பரிமாற்றம் நிறைவடையும்.

விவரங்கள்

அனைத்து பரிவர்த்தனைகளுக்கும் இது பொருந்துமா?

வழக்கமான தினசரி சிறிய தொகை பரிவர்த்தனைகள் அல்லது காய்கறி, மளிகைக் கடைகளில் செய்யப்படும் சாதாரண கட்டணங்களுக்கு இந்த பாப்-அப் வராது.

வழக்கத்திற்கு மாறான பெரிய தொகை, புதிய நபரின் கணக்கிற்கு பணம் அனுப்புவது, புதிய சாதனத்தை பயன்படுத்துவது அல்லது வழக்கத்திற்கு மாறான இருப்பிடத்திலிருந்து பரிவர்த்தனை செய்வது போன்ற சந்தேகத்திற்கிடமான சூழல்களில் மட்டுமே இந்த எச்சரிக்கை பாப்-அப் பயன்பாட்டிற்கு வரும்.

போன் கால்கள் அல்லது போலி வாடிக்கையாளர் சேவை எண்கள் மூலமாக தந்திரமாக பேசி, மக்களை உடனடியாக பணம் அனுப்ப வைக்கும் மோசடிகள் அதிகரித்து வருகின்றன.

எனவே, சந்தேகத்திற்குரிய சூழலில் திரையில் தோன்றும் இந்த ஒரு நொடி இடைவெளி, பயனர்கள் தங்களை மோசடிகளிலிருந்து தற்காத்து கொள்ள ஒரு வாய்ப்பாக அமையும் என வங்கிகள் நம்புகின்றன.

ADVERTISEMENT