Loading...
EPFO வரம்பு ரூ.25,000 ஆக அதிகரிப்பு: 51 லட்சம் பேருக்கு PF, பென்ஷன் மற்றும் இன்சூரன்ஸ் பலன்கள்
EPFO வரம்பு ரூ.25,000 ஆக அதிகரிப்பு

EPFO வரம்பு ரூ.25,000 ஆக அதிகரிப்பு: 51 லட்சம் பேருக்கு PF, பென்ஷன் மற்றும் இன்சூரன்ஸ் பலன்கள்

எழுதியவர் Venkatalakshmi V
Sep 16, 2026
05:17 pm

செய்தி முன்னோட்டம்

பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பின் (EPFO) கட்டாய சமூக பாதுகாப்புக்கான மாதாந்திரச் சம்பள வரம்பை ரூ.15,000-லிருந்து ரூ.25,000 ஆக உயர்த்த ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இந்த முடிவின் மூலம் புதிதாக 51 லட்சத்திற்கும் அதிகமான ஊழியர்கள் இபிஎஃப்ஓ கட்டாயப் பாதுகாப்பின் கீழ் கொண்டுவரப்படுவார்கள். இதன் மூலம் அவர்களுக்கு வருங்கால வைப்பு நிதி (EPF), ஓய்வூதியம் (EPS) மற்றும் காப்பீட்டு பலன்கள் (EDLI) ஆகியவை முறைப்படி கிடைக்கப்பெறும்.

வரம்பு

12 ஆண்டுகளுக்கு பின் வரலாற்று சிறப்புமிக்க திருத்தம்

இதற்கு முன் செப்டம்பர் 2014-இல் இபிஎஃப்ஓ சம்பள வரம்பு ரூ.15,000 ஆக உயர்த்தப்பட்டது. அதன்பின் 12 ஆண்டுகள் கழித்து தற்போதைய ஊதிய உயர்வு, பணவீக்கம் மற்றும் முறைசாரா தொழிலாளர்கள் முறைசார் பணிகளுக்கு மாறுவதை அடிப்படையாகக் கொண்டு இந்த வரம்பு ரூ.25,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

மாதம் ரூ.15,000 முதல் ரூ.25,000 வரை சம்பளம் பெறும் பணியாளர்கள் இதுவரை கட்டாய பிஎஃப் வரம்பிற்குள் வரமால் இருந்த நிலையில், இனி அவர்கள் சட்டப்பூர்வ சமூக பாதுகாப்பு வரம்பிற்குள் கொண்டுவரப்படுவார்கள்.

பலன்கள்

ஊழியர்களுக்கு கிடைக்கும் 3 முக்கிய பலன்கள்

சம்பள வரம்பு உயர்த்தப்பட்டதன் மூலம் ஊழியர்கள் பெறவுள்ள முக்கிய பலன்கள்:

மாதாந்திர வருங்கால வைப்பு நிதி சேமிப்பு அதிகரிக்கும்.

ஊழியர்களின் ஓய்வூதியத் திட்டப் பலன்கள் மேம்படும்.

ஊழியர் வைப்பு நிதி சார்ந்த காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் குடும்பத்திற்கு நிதிப் பாதுகாப்பு கிடைக்கும்.

இது ஊழியர்களின் பணிப் பாதுகாப்பை உறுதி செய்வதோடு, நிறுவனங்களில் பணியாளர்கள் தொடர்ந்து நீடிப்பதற்கும் வழிவகுக்கும்.

இத்திட்டத்திற்கு ஜூன் 16, 2026 அன்று நடைபெற்ற செலவின நிதிக் குழு பரிந்துரை செய்தது. இந்த முடிவால் அரசுக்கு ஆண்டிற்குச் சுமார் ரூ.11,339 கோடி செலவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. (தற்போது அளிக்கப்படும் நிதியுதவி ரூ.10,250 கோடி).

அடுத்த 5 ஆண்டுகளில் இதற்கான மொத்தச் செலவு தோராயமாக ரூ.56,696 கோடி என மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.

ADVERTISEMENT