100 நாள் வேலைத்திட்ட நாட்கள் அதிகரிப்பு; மத்திய அரசு தகவல்
நடப்பு ஆண்டின் முதல் பாதியில் 100 நாள் வேலைவாய்ப்புத் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் கிராமப்புற வேலைவாய்ப்பு 16 சதவீதம் குறைந்துள்ளது என்று சில ஊடகங்கள் செய்தி வெளியிட்ட நிலையில், அதை மத்திய அரசு மறுத்துள்ளது. மத்திய அரசின் ஊரக வளர்ச்சி அமைச்சகம் இதுகுறித்து ஞாயிற்றுக்கிழமை (அக்டோபர் 27) அறிக்கை வெளியிட்டுள்ளது. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதிச் சட்டம் 2005 (100 நாள் வேலைத் திட்டம்) நாட்டின் கிராமப்புறங்களில் உள்ள குடும்பங்களின் வாழ்வாதாரப் பாதுகாப்பை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இதன் மூலம் ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஒரு நிதியாண்டில் குறைந்தபட்சம் நூறு நாட்களுக்கு உத்தரவாதமான கூலி வேலை வழங்க வேண்டும்.
ஊரக வளர்ச்சி அமைச்சகம் அறிக்கை
ஊரக வளர்ச்சி அமைச்சகம் தனது அறிக்கையில் கூறியுள்ளது பின்வருமாறு:- நூறு நாள் வேலைத் திட்டத்தில் 2006-07 நிதியாண்டு முதல் 2013-14 நிதியாண்டு வரையிலான மொத்த நபர் நாட்கள் 1660 கோடியாக இருந்தது. அதேசமயம், 2014-15 நிதியாண்டு முதல் 2024-25 நிதியாண்டு வரையிலான மொத்த நபர் நாட்கள் 2923 கோடியாக இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த திட்டம் ஒரு தேவை உந்துதல் திட்டமாக இருப்பதாலும், நடப்பு நிதியாண்டு இன்னும் நடந்து கொண்டிருப்பதாலும், நபர்களின் நாட்களை உருவாக்குவதற்கான சரியான இலக்கை நிர்ணயிக்க முடியாது. இருப்பினும், மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்கள் உள்ளூர் தேவைகளுக்கு ஏற்ப தொழிலாளர் வரவு செலவுத் திட்டத்தைத் திருத்துவதற்கான முன்மொழிவை அனுப்பலாம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஊதியம் குறைப்பு புகாருக்கு மறுப்பு
100 நாள் வேலைத்திட்டத்திற்கான பட்ஜெட் மற்றும் தொழிலாளர்களின் ஊதியம் தொடர்ந்து குறைக்கப்படுகிறது என்று கூறுவது தவறான மதிப்பீடாகும் என அமைச்சகம் தெரிவித்துள்ளது. திட்டத்திற்கான பட்ஜெட் மதிப்பீடு அதிகரித்து வருவதாகவும் தெரிவித்துள்ளது. 2013-14 நிதியாண்டில், பட்ஜெட் ஒதுக்கீடு ரூ. 33,000 கோடியாக இருந்தது. இது நடப்பு 2024-25 நிதியாண்டில் ரூ. 86,000 கோடியாக இருந்தது. இது தொடக்கத்தில் இருந்தே மிக அதிகமாகும். மேலும், 2024-25 நிதியாண்டில் குறைந்தபட்ச சராசரி அறிவிக்கப்பட்ட ஊதிய விகிதம் 7 சதவீதம் அதிகரித்துள்ளது என்று அமைச்சகம் மேலும் தெரிவித்துள்ளது. இதற்கிடையே, 100 நாள் வேலைத் திட்டத்தில் பணியாற்றும் பயனாளிகளுக்கு நேரடி பணப்பரிமாற்ற முறையில் ஊதியம் அவர்களது வங்கி கணக்கில் வரவு வைக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.