Page Loader
உலகளாவிய எலெக்ட்ரிக் கார் விற்பனையில் டெஸ்லாவை பின்தள்ளுமா BYD?
உலகளாவிய எலெக்ட்ரிக் கார் விற்பனையில் டெஸ்லாவை பின்தள்ளுமா BYD

உலகளாவிய எலெக்ட்ரிக் கார் விற்பனையில் டெஸ்லாவை பின்தள்ளுமா BYD?

எழுதியவர் Prasanna Venkatesh
Dec 30, 2023
09:17 am

செய்தி முன்னோட்டம்

உலகளவில் எலெக்ட்ரிக் கார் விற்பனையில் அமெரிக்காவைச் சேர்ந்த எலான் மஸ்கின் டெஸ்லாவை, சீனாவைச் சேர்ந்த BYD நிறுவனம் பின்தள்ளி முதலிடத்தைப் பிடிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த டிசம்பர் மாத எலெக்ட்ரிக் கார் விற்பனை அளவை BYD மற்றும் டெஸ்லா உள்ளிட்ட நிறுவனங்கள், 2024 ஜனவரி முதல் வாரம் வெளியிடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அந்த விற்பனை அறிக்கையில் டெஸ்லாவை, BYD முந்தியிருக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. 2023ல் பிளக்-இன் ஹைபிரிட் எலெக்ட்ரிக் கார்களுடன் சேர்த்து, 3 மில்லியன் எலெக்ட்ரிக் கார்கள் என்ற விற்பனை அளவை BYD எட்ட, இந்த டிசம்பர் மாதம் மட்டும் 3,16,626 கார்களை அந்நிறுவனம் விற்பனை செய்ய வேண்டியிருக்கும்.

எலெக்ட்ரிக் கார்

டெஸ்லாவை பின்தள்ளுமா BYD? 

அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான நான்காம் காலாண்டில் மட்டும் உலகளவில், 5 லட்சம் பேட்டரி எலெக்ட்ரிக் வாகனங்களை BYD விற்பனை செய்திருக்கும் பட்சத்தில், டெஸ்லாவை வீழ்த்தி விற்பனையில் முதன்முறையாக உலகளாவிய எலெக்ட்ரிக் கார் விற்பனையில் BYD முதலிடத்தைப் பிடிக்கும். இந்த 2023ம் ஆண்டு மட்டும் 1.8 மில்லியன் எலெக்ட்ரிக் வாகன விற்பனை என்ற இலக்கை நிர்ணயித்திருந்தது டெஸ்லா. அந்த இலக்கை எட்ட, இந்த நான்காம் காலாண்டில் மட்டும் 4,76,000 எலெக்ட்ரிக் கார்களை அந்நிறுவனம் விற்பனை செய்திருக்க வேண்டும். ஆனால், வல்லுநர்களின் கணிப்புப்படி டெஸ்லா நிறுவனம் இந்த டிசம்பரில் முடியும் காலாண்டில் 4,80,000 எலெக்ட்ரிக் கார்களை விற்பனை செய்திருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. சீனாவில் டெல்ஸா கார்களின் விற்பனை உயர்வு இதற்கு முக்கிய காரணமாகப் பார்க்கப்படுகிறது.