
இந்தியாவிலேயே டாப்; அதிகபட்ச பொருளாதார வளர்ச்சியை பெற்று தமிழகம் சாதனை
செய்தி முன்னோட்டம்
2024-25 நிதியாண்டில் இந்தியாவில் வேகமாக வளரும் மாநிலமாக தமிழகம் உருவெடுத்துள்ளது. தமிழகத்தின் மொத்த மாநில உள்நாட்டுஉற்பத்தி (ஜிஎஸ்டிபி) வளர்ச்சி விகிதம் 9.69% ஆக உயர்ந்துள்ளது.
மத்திய புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகம் வெளியிட்ட தரவுகளின்படி, மாநிலத்தின் ஜிஎஸ்டிபி ₹17.23 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது.
இது முந்தைய 2023-24 நிதியாண்டில் ₹15.71 லட்சம் கோடியாக இருந்தது. மாநில ஜிஎஸ்டிபி 8% க்கும் அதிகமான வளர்ச்சிக்கான மாநில அரசின் முந்தைய கணிப்புக்ளை விஞ்சி, கூடுதல் வளர்ச்சியை அடைந்துள்ளது.
இந்த எழுச்சிக்கு சேவைத் துறை குறிப்பிடத்தக்க பங்களிப்பை அளித்தது. இந்த துறை 12.7% வளர்ச்சியைப் பெற்றுள்ள நிலையில், விவசாயம் மற்றும் கால்நடைத் துறை 0.15% மட்டுமே வளர்ச்சியைக் கண்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
பாராட்டு
முதல்வர் ஸ்டாலின் பாராட்டு
மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடும்போது, தமிழ்நாடு பட்டியலில் முன்னணியில் உள்ளது, அதைத் தொடர்ந்து ஆந்திரா 8.21% வளர்ச்சியுடனும், ராஜஸ்தான் 7.82% வளர்ச்சியுடனும் உள்ளன.
இந்த சாதனை குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்தார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள சமூக ஊடக பதிவில், தமிழ்நாட்டின் உள்ளடக்கிய வளர்ச்சி, பாலின சமத்துவம் மற்றும் சமச்சீர் பிராந்திய வளர்ச்சியில் கவனம் செலுத்தியது என்றும் இது வெற்றிக்கு மையாக செயல்பட்டது என்றும் கூறினார்.
வலுவான உள்கட்டமைப்பு, நிலையான நிர்வாகம் மற்றும் தெளிவான நீண்டகால தொலைநோக்கு பார்வை ஆகியவை மாநிலத்தின் பொருளாதார செயல்திறனுக்கு முக்கிய காரணிகளாக அவர் பாராட்டினார்.
1 டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக மாறுவதற்கான அதன் லட்சிய இலக்கை நோக்கி தமிழ்நாடு சீராக முன்னேறி வருவதாகவும் அவர் மேலும் கூறினார்.