Swiggy நிறுவனத்தின் உயர்மட்ட நிர்வாகிகள் பலர் வெளியேறியதை தொடர்ந்து துணைத் தலைவரும் விலகல்
முக்கிய உணவு விநியோக தளமான ஸ்விக்கி, அதன் உயர் நிர்வாகத்தில் குறிப்பிடத்தக்க மாற்றங்களைச் சந்தித்து வருகிறது. தற்போது அந்த நிறுவனத்தின் சப்ளை செயின் மேனேஜ்மென்ட் (எஸ்சிஎம்) துணைத் தலைவர் கரண் அரோரா மூன்றரை ஆண்டுகள் பணியாற்றிய பிறகு ராஜினாமா செய்துள்ளார். கடந்த ஆண்டு ஸ்விக்கி நிறுவனத்தை விட்டு வெளியேறிய பல உயர் நிர்வாகிகளின் பட்டியலில் தற்போது இவரும் இணைந்துள்ளார். அரோராவின் கவனித்து வந்த பொறுப்புகளை, சப்ளை செயின் VP பூபேஷ் பங்க்டி கவனிப்பார் என அந்நிர்வாகம் அறிவித்துள்ளது. பூபேஷ் பங்டி 2021 முதல் Swiggy-யில் பணிபுரிந்து வருகிறார்.
ஏப்ரல் 2023 இல் தொடங்கிய நிர்வாகிகள் விலகல்
2023ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் தனது சொந்தத் தொழிலைத் தொடங்குவதற்காக ஸ்விக்கியை விட்டு விலகிய அப்போதைய தலைமை தொழில்நுட்ப அதிகாரி (CTO) டேல் வாஸுடன் உயர்தர நிர்வாகிகளின் வெளியேற்றங்கள் தொடங்கியது. மே 2023இல், பிராண்ட் மற்றும் தயாரிப்பு சந்தைப்படுத்தலுக்குப் பொறுப்பான ஆஷிஷ் லிங்கம்னேனி வெளியேறினார். இன்ஸ்டாமார்ட்டின் வருவாய் மற்றும் வளர்ச்சியை வழிநடத்திய நிஷாத் கென்க்ரே, லிங்கம்நேனி வெளியேறிய சில நாட்களில் அவரை பின்தொடர்ந்தார். அதேபோல அனுஜ் ரதி, சித்தார்த் சத்பதி மற்றும் கார்த்திக் குருமூர்த்தி ஆகியோரும் நிறுவனத்தை விட்டு விலகிவிட்டனர். தற்போது விலகியுள்ள அரோரா ஸ்விக்கி இன்ஸ்டாமார்ட்டின் முன்னாள் தலைவரான குருமூர்த்தியுடன் இணைந்து கன்வெனியோ என்ற புதிய முயற்சியைத் தொடங்க உள்ளார் எனக்கூறப்படுகிறது.