LOADING...
டெம்போ டிரைவர் டூ விமான நிறுவன உரிமையாளர்: உ.பி இளைஞரின் அசாத்திய சாதனை
சொந்த விமான நிறுவனத்தை தொடங்கி ஒட்டுமொத்த இந்தியாவையும் திரும்பிப் பார்க்க வைத்துள்ளார் ஷ்ரவன் விஸ்வகர்மா

டெம்போ டிரைவர் டூ விமான நிறுவன உரிமையாளர்: உ.பி இளைஞரின் அசாத்திய சாதனை

எழுதியவர் Venkatalakshmi V
Jan 01, 2026
09:19 am

செய்தி முன்னோட்டம்

7 ஆண்டுகளுக்கு முன்பு கான்பூர் வீதிகளில் டெம்போ ஓட்டிய ஒரு இளைஞர், இன்று தனது சொந்த விமான நிறுவனத்தை தொடங்கி ஒட்டுமொத்த இந்தியாவையும் திரும்பிப் பார்க்க வைத்துள்ளார். அவர்தான் 'ஷங்க் ஏர்' (Shankh Air) விமான நிறுவனத்தின் நிறுவனர் ஷ்ரவன் விஸ்வகர்மா. உத்தரப் பிரதேசத்தின் சொந்த மண்ணிலிருந்து உருவாகும் முதல் விமான நிறுவனம் இது என்பது குறிப்பிடத்தக்கது. "கீழ்மட்டத்தில் இருந்து வரும் ஒருவருக்கு சைக்கிள், பஸ், ரயில், டெம்போ என எல்லாமே தெரியும். கனவு காண்பது கடினமாக இருந்த ஒரு சூழலில் இருந்து இன்று ஒரு விமான நிறுவனத்தையே உருவாக்கியிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது" என நெகிழ்ச்சியுடன் கூறுகிறார் 35 வயதான இந்த இளம் தொழிலதிபர் ஷ்ரவன் விஸ்வகர்மா.

தொடக்கம்

எளிய தொடக்கம் முதல் எழுச்சி வரை

உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரில் ஒரு நடுத்தர வர்க்கக் குடும்பத்தில் பிறந்தவர் ஷ்ரவன். படிப்பில் பெரிதாக ஆர்வம் காட்டாத இவர், தனது வாழ்வாதாரத்திற்காக ஆட்டோ மற்றும் டெம்போக்களை ஓட்டியுள்ளார். 2014-ம் ஆண்டு சிமெண்ட் வியாபாரத்தில் இறங்கியது இவரது வாழ்க்கையில் திருப்புமுனையாக அமைந்தது. அதனை தொடர்ந்து இரும்பு, சுரங்கம் மற்றும் போக்குவரத்து துறைகளில் தனது கால்தடத்தை பதித்தார். லாரிகளை வாங்கி ஒரு பெரிய போக்குவரத்து நிறுவனத்தையே உருவாக்கினார்.

கனவுத் திட்டம்

ஷங்க் ஏர் (Shankh Air) - ஒரு கனவுத் திட்டம்

விமானம் என்பது வசதி படைத்தவர்களுக்கு மட்டுமானது அல்ல, அது ஒரு சாதாரண போக்குவரத்து வாகனம் தான் என்ற எண்ணத்தை மக்களிடம் கொண்டு சேர்க்க விரும்பினார் ஷ்ரவன். சுமார் நான்கு ஆண்டுகளுக்கு முன்பு விமானத் துறையில் இறங்கும் எண்ணம் இவருக்கு தோன்றியது. அதற்கான விதிகள் மற்றும் அனுமதிகள் (NOC) குறித்துத் தீவிரமாக ஆராய்ந்தார். மத்திய விமானப் போக்குவரத்து அமைச்சகத்திடம் இருந்து தடையில்லா சான்றிதழை (NOC) பெற்றுள்ள இவரது 'ஷங்க் ஏர்' நிறுவனம், 2026 ஜனவரி முதல் வாரத்தில் தனது சேவையை தொடங்கவுள்ளது. தொடக்கத்தில் மூன்று ஏர்பஸ் (Airbus) விமானங்களுடன் லக்னோவை டெல்லி, மும்பை போன்ற பெருநகரங்களுடன் இணைக்கும் வகையில் இந்தச் சேவை அமையும்.

Advertisement