காலையிலேயே கையை சுட்ட பங்குச்சந்தை; 500 புள்ளிகள் சரிந்த சென்செக்ஸ்; முதலீட்டாளர்களை அதிரவைத்த முக்கிய காரணங்கள்
செய்தி முன்னோட்டம்
இந்திய பங்குச் சந்தை திங்கட்கிழமை (ஜனவரி 12) காலை வர்த்தகத்திலேயே கடும் சரிவைச் சந்தித்துள்ளது. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் சுமார் 500 புள்ளிகள் வரை சரிந்து 83,123 என்ற அளவில் வர்த்தகமானது. அதேபோல், தேசிய பங்குச்சந்தை குறியீடான நிஃப்டி 120 புள்ளிகளுக்கு மேல் குறைந்து 25,556 என்ற நிலையை எட்டியது. இந்தத் தொடர் சரிவு முதலீட்டாளர்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளது. பங்குச்சந்தை வீழ்ச்சிக்கு உலகளாவிய அரசியல் மற்றும் பொருளாதார மாற்றங்களே முக்கியக் காரணமாகக் கூறப்படுகிறது. குறிப்பாக, அமெரிக்கா - இந்தியா இடையிலான வர்த்தக ஒப்பந்தம் குறித்த நிச்சயமற்ற சூழல் நிலவுகிறது.
காரணங்கள்
தொழில்நுட்பக் காரணங்கள் மற்றும் விற்பனை அழுத்தம்
ஈரான் மற்றும் வெனிசுலா நாடுகளில் ஏற்பட்டுள்ள பதற்றமான சூழல் உலக முதலீட்டாளர்களைப் பாதுகாப்பான முதலீடுகளை நோக்கித் தள்ளியுள்ளது. இது இந்தியச் சந்தையிலிருந்து அந்நிய முதலீடுகள் வெளியேற வழிவகுத்துள்ளது. தொழில்நுட்ப ரீதியாகப் பார்க்கும்போது, நிஃப்டி தனது முக்கிய ஆதரவு நிலைகளை உடைத்து கீழே இறங்கியுள்ளது. வங்கி மற்றும் ஐடி துறை பங்குகள் பெரிய அளவில் சரிவைச் சந்தித்துள்ளன. குறிப்பாக, டிசிஎஸ் மற்றும் ஹெச்சிஎல் போன்ற நிறுவனங்களின் மூன்றாம் காலாண்டு நிதி முடிவுகள் வெளியாக உள்ள நிலையில், முதலீட்டாளர்கள் எச்சரிக்கையுடன் செயல்பட்டு லாபத்தைப் பதிவு செய்து வருகின்றனர்.
சவால்கள்
முதலீட்டாளர்களுக்குக் காத்திருக்கும் சவால்கள்
அமெரிக்காவின் வேலைவாய்ப்பு தரவுகள் வெளியாக உள்ளதாலும், டிரம்பின் வரி விதிப்புக் கொள்கைகள் குறித்த தெளிவற்ற நிலையாலும் சந்தையில் ஏற்ற இறக்கம் அதிகமாக இருக்கும் என்று நிபுணர்கள் கணித்துள்ளனர். ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் போன்ற பெரிய நிறுவனங்களின் நிதி முடிவுகளே வரும் நாட்களில் சந்தையின் திசையைத் தீர்மானிக்கும். அதுவரை சந்தையில் ஒருவிதத் தேக்க நிலை நீடிக்க வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது.