LOADING...
1,000 புள்ளிகள் சரிந்த சென்செக்ஸ்; கச்சா எண்ணெய் விலையால் வந்த வினை? முழு விவரம்
சென்செக்ஸ் 1,000 புள்ளிகள் சரிவு

1,000 புள்ளிகள் சரிந்த சென்செக்ஸ்; கச்சா எண்ணெய் விலையால் வந்த வினை? முழு விவரம்

எழுதியவர் Sekar Chinnappan
Mar 27, 2026
11:03 am

செய்தி முன்னோட்டம்

இந்திய பங்குச் சந்தையான தலால் ஸ்ட்ரீட் இன்று (மார்ச் 27) ரத்தக் களரியாக மாறியது. வர்த்தகத் தொடக்கத்திலேயே சென்செக்ஸ் 1,000 புள்ளிகளுக்கும் மேல் சரிந்து 74,182 நிலையை எட்டியது. அதேபோல் நிஃப்டி 50 குறியீடு 300 புள்ளிகளுக்கு மேல் சரிந்து 23,000 புள்ளிகளுக்குக் கீழ் சென்றது. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஈரான் மீதான தாக்குதல்களை ஏப்ரல் 6 வரை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக அறிவித்த போதிலும், சந்தை ஏன் சரிந்தது என்பதற்கான காரணங்களை விரிவாகப் பார்ப்போம்.

நிச்சயமற்ற தன்மை

நிச்சயமற்ற தன்மையில் தலால் ஸ்ட்ரீட்

அமெரிக்க அதிபர் டிரம்பின் அறிவிப்பு ஆரம்பத்தில் நம்பிக்கையைத் தந்தாலும், ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே நிரந்தரமான அமைதி ஒப்பந்தம் ஏதும் ஏற்படவில்லை. போர் பதற்றம் இன்னும் குறையாததே முதலீட்டாளர்களின் அச்சத்திற்குக் காரணமாகும். மேலும், வியாழக்கிழமை அன்று ராம நவமி விடுமுறை காரணமாக இந்தியச் சந்தைகள் மூடப்பட்டிருந்தன. அந்த நேரத்தில் உலகளாவிய சந்தைகளில் ஏற்பட்ட சரிவை ஈடுகட்ட, இன்று இந்தியச் சந்தை கடும் சரிவைச் சந்திக்க வேண்டியதாயிற்று.

கச்சா எண்ணெய்

கச்சா எண்ணெய் தாக்கம்

இந்தியப் பொருளாதாரத்திற்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக விளங்குவது கச்சா எண்ணெய் விலை உயர்வுதான். சர்வதேச சந்தையில் பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை மீண்டும் பேரலுக்கு 108 டாலரை நெருங்கியுள்ளது. இது இந்தியாவின் பணவீக்கத்தை அதிகரிக்கும் என்பதோடு, கார்ப்பரேட் நிறுவனங்களின் லாப வரம்பையும் பாதிக்கும். அரசு பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை லிட்டருக்கு 10 ரூபாய் குறைத்திருந்தாலும், சர்வதேச அளவில் எண்ணெய் விலை உயர்ந்து வருவது முதலீட்டாளர்களுக்குத் திருப்தி அளிக்கவில்லை.

Advertisement

ரூபாய் மதிப்பு

தடுமாறும் இந்திய ரூபாய்

கச்சா எண்ணெய் விலை உயர்வு மற்றும் பங்குச்சந்தை சரிவு காரணமாக இந்திய ரூபாயின் மதிப்பு முன்னெப்போதும் இல்லாத வகையில் வீழ்ச்சியடைந்துள்ளது. அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 94.15 என்ற வரலாற்றுச் சரிவை எட்டியுள்ளது. இது இறக்குமதி செலவுகளை மேலும் அதிகரித்து, நாட்டின் பொருளாதாரத்தைச் சீர்குலைக்கும் காரணியாக மாறியுள்ளது. தற்போதைய சந்தை வீழ்ச்சிக்கு ஏதேனும் ஒரு புதிய செய்தி காரணம் அல்ல, மாறாக, நிலவும் சிக்கல்களுக்குத் தீர்வு கிடைக்காததே காரணம். போர் பதற்றம் தணியும் வரை அல்லது கச்சா எண்ணெய் விலை குறையும் வரை சந்தையில் ஏற்ற இறக்கங்கள் தொடரும். எனவே, முதலீட்டாளர்கள் அவசரப்பட்டு முடிவெடுக்காமல், சந்தையின் போக்கைக் கவனித்து நிதானமாகச் செயல்படுவது அவசியம் என நிபுணர்கள் பரிந்துரைத்துள்ளனர்.

Advertisement