LOADING...
சரிவிலிருந்து மீண்டது பங்குச்சந்தை: சென்செக்ஸ் 73,880, நிஃப்டி 23,237 ஆக உயர்வு
டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 95.48 ஆக உயர்ந்துள்ளது.

சரிவிலிருந்து மீண்டது பங்குச்சந்தை: சென்செக்ஸ் 73,880, நிஃப்டி 23,237 ஆக உயர்வு

எழுதியவர் Vasuki
Jun 09, 2026
12:49 pm

செய்தி முன்னோட்டம்

கடந்த சில தினங்களாகக் கடுமையான வீழ்ச்சியைச் சந்தித்து வந்த இந்தியப் பங்குச்சந்தைகள், இன்று செவ்வாய்க்கிழமை வர்த்தகத் தொடக்கத்திலேயே அசாத்திய மீட்சியைக் கண்டு காளைகளின் ஆதிக்கத்திற்குத் திரும்பியுள்ளன. சர்வதேசச் சந்தைகளில் நிலவி வரும் சாதகமான சூழல் மற்றும் உலகளாவிய பொருளாதார நகர்வுகள் காரணமாக முதலீட்டாளர்கள் உற்சாகமடைந்ததே இந்தத் திடீர் உயர்வுக்கு முக்கியக் காரணமாகப் பார்க்கப்படுகிறது. இன்று காலை வர்த்தகம் தொடங்கிய சில நிமிடங்களிலேயே, மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் (Sensex) 356.67 புள்ளிகள் அல்லது 0.49 சதவீதம் உயர்ந்து 73,880.93 புள்ளிகளாக வர்த்தகமானது.

பங்குச்சந்தை உயர்வு

காளைகளின் ஆதிக்கத்துடன் தொடங்கிய பங்குச்சந்தை

இன்று காலை வர்த்தகம் தொடங்கிய சில நிமிடங்களிலேயே மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் மற்றும் தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி ஆகிய இரண்டும் சுமார் 0.5 விழுக்காடு வரை உயர்ந்து வர்த்தகமாகின. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 356.67 புள்ளிகள் (0.49%) உயர்ந்து 73,880.93 என்ற புள்ளிகளிலும், தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 114.10 புள்ளிகள் (0.49%) உயர்ந்து 23,237.10 என்ற புள்ளிகளிலும் தங்களது வர்த்தகத்தைத் தொடங்கின. முன்னதாக, ப்ரீ-ஓப்பனிங் மற்றும் கிப்ட் நிஃப்டி நிலவரங்கள் சற்றே ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்ட போதிலும், சந்தை தொடங்கியவுடன் காளைகளின் கரம் ஓங்கியது.

முக்கியப் பங்குகள்

சந்தையில் லாப மற்றும் நஷ்டமடைந்த முக்கியப் பங்குகள்

ஆரம்பக்கட்ட வர்த்தகத்தில் டெக்னாலஜி மற்றும் ஏவியேஷன் உள்ளிட்ட சில குறிப்பிட்ட துறைப் பங்குகள் நல்ல லாபத்தைக் கண்டன. குறிப்பாக ட்ரெண்ட், இண்டர்குளோப் ஏவியேஷன் (இண்டிகோ), கிராசிம், ஜியோ பைனான்சியல் மற்றும் விப்ரோ ஆகிய நிறுவனங்களின் பங்குகள் அதிக லாபமீட்டி முன்னிலையில் இருந்தன. மறுபுறம், இன்ஃபோசிஸ், சன் பார்மா, டாட்டா ஸ்டீல், பாரதி ஏர்டெல் மற்றும் மேக்ஸ் ஹெல்த்கேர் ஆகிய நிறுவனங்களின் பங்குகள் ஆரம்பக்கட்ட வர்த்தகத்தில் சற்றே சரிவைச் சந்தித்து நஷ்டமடைந்தவர்களின் பட்டியலில் இடம்பிடித்தன.

Advertisement

கச்சா எண்ணெய் விலை சரிவு

பலமடைந்த இந்திய ரூபாய் மற்றும் கச்சா எண்ணெய் விலை சரிவு

பங்குச்சந்தை உயர்வுக்குத் துணையாக இந்தியச் செலாவணியும், கச்சா எண்ணெய் விலையும் சாதகமாக அமைந்துள்ளன. அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு, முந்தைய வர்த்தக நாளின் முடிவான 95.71-லிருந்து உயர்ந்து, இன்று காலை 95.48 ஆக வலுவடைந்துத் தொடங்கியது. அதேபோல், ஈரான் - இஸ்ரேல் இடையே தற்காலிகப் போர்நிறுத்தச் சூழல் நிலவுவதால், சர்வதேசச் சந்தையில் பெஞ்ச்மார்க் பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை பேரலுக்கு 94 டாலருக்கும் கீழ் குறைந்துள்ளது. டபுள்யூடிஐ (WTI) கச்சா எண்ணெய் பேரலுக்குச் சுமார் 91 டாலராகவும் வர்த்தகமாகி வருகிறது.

Advertisement

அமெரிக்க நீதிமன்றம்

அமெரிக்க நீதிமன்ற உத்தரவும் ஐடி பங்குகளுக்கான சாதகமும்

ஜியோஜித் இன்வெஸ்ட்மென்ட்ஸ் நிறுவனத்தின் தலைமை முதலீட்டு உத்தியாளர் டாக்டர் வி.கே. விஜயகுமார் இன்றைய சந்தை நிலவரம் குறித்துப் பேசுகையில், அமெரிக்காவின் நாஸ்டாக் சந்தையில் டெக்னாலஜி பங்குகள் மீண்டதைதொடர்ந்து ஆசியச் சந்தைகளிலும் சிப் தயாரிப்பு நிறுவனங்களின் பங்குகள் உயர்ந்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். மேலும், அமெரிக்காவின் ஃபெடரல் நீதிமன்றம் அதிபர் டொனால்டு ட்ரம்பின் H1-B விசா கட்டண உயர்வை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது, இந்திய ஐடி (IT) துறைப் பங்குகளுக்குச் சற்றுச் சாதகமான விஷயமாக மாறியுள்ளது. வெளிநாட்டு நிறுவன முதலீட்டாளர்கள் (FIIs) தொடர்ந்து தங்களது பங்குகளை விற்று வருவதால் சந்தையில் இன்றும் ஏற்ற இறக்கம் அதிகமாக இருக்க வாய்ப்புள்ளது என்றாலும், லார்ஜ்கேப் மற்றும் வங்கித் துறைப் பங்குகள் தற்போது முதலீட்டிற்குச் சாதகமான விலையில் உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

Advertisement