வாட்ஸ்அப்பில் விவாகரத்து, ரகசிய பங்கு மாற்றம்: ஜோஹோ நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு மீது முன்னாள் மனைவி பரபரப்பு புகார்
செய்தி முன்னோட்டம்
பிரபல மென்பொருள் நிறுவனமான ஜோஹோ நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு தனக்குத் தெரியாமலேயே நிறுவனத்தின் பெரும்பகுதி பங்குகளைத் தனது குடும்ப உறுப்பினர்களுக்கு ரகசியமாக மாற்றிவிட்டதாக அவரது முன்னாள் மனைவி பிரமிளா சீனிவாசன் பகிரங்கமாகக் குற்றம் சாட்டியுள்ளார். அமெரிக்காவின் பிரபல ஃபோர்ப்ஸ் இதழுக்கு அளித்த பிரத்யேகப் பேட்டியில் தங்கள் விவாகரத்து மற்றும் சொத்துப் பிரிப்பு வழக்கு குறித்த அதிர்ச்சியூட்டும் தகவல்களை அவர் வெளியிட்டுள்ளார். கடந்த 2019 ஆம் ஆண்டு ஸ்ரீதர் வேம்பு அமெரிக்காவிலிருந்து தமிழ்நாட்டிற்கு திரும்பியபோது நிறுவனம் சார்ந்த பணிகளுக்காகவே செல்வதாக தான் நம்பியதாகவும் ஆனால் 2020 அக்டோபரில் வாட்ஸ்அப் செய்தி மூலம் அவர் விவாகரத்து கோரியது தனக்குப் பெரும் அதிர்ச்சியை அளித்ததாகவும் பிரமிளா தெரிவித்துள்ளார்.
புகார்
83% பங்குகள் சகோதரி மற்றும் சகோதரர் பெயருக்கு மாற்றப்பட்டதாக எழுந்த புகார்
கலிபோர்னியா சட்டப்படி திருமணத்திற்கு பிறகு ஈட்டப்பட்ட சொத்துக்கள் கணவன் மனைவி இருவருக்கும் பொதுவானவை என்ற விதியே இந்த சட்டப் போராட்டத்தின் மையமாக உள்ளது.
சுமார் 6.8 பில்லியன் டாலர் மதிப்புள்ள ஜோஹோ நிறுவனத்தில் ஸ்ரீதர் வேம்பு வெறும் 5 சதவீதப் பங்குகளை மட்டுமே வைத்திருப்பதும் அவரது சகோதரி ராதா வேம்பு 47.8 சதவீதமும் சகோதரர் சேகர் 35.2 சதவீதமும் வைத்திருப்பதும் ஆவணங்கள் மூலம் தெரியவந்தது.
எந்தவொரு பணப் பரிமாற்றமும் இன்றி 2011 ஆம் ஆண்டில் சிக்கலான பரிவர்த்தனைகள் வழியாக தனக்குத் தெரியாமல் இந்த பங்குகள் மாற்றப்பட்டதாகப் பிரமிளா குற்றம் சாட்டியுள்ளார்.
சட்டப் போராட்டம்
உலகின் மிக விலையுயர்ந்த விவாகரத்து வழக்குகளில் ஒன்றாக மாறிய சட்டப் போராட்டம்
கடந்த 1993 ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்ட இவர்களுக்கு 2023 செப்டம்பரில் கலிபோர்னியா நீதிமன்றம் விவாகரத்து வழங்கிய போதிலும் ஜோஹோ சொத்துக்களைப் பிரிக்கும் வழக்கு தொடர்ந்து தீவிரமடைந்து வருகிறது.
இந்த வழக்கிற்காக பிரமிளா சீனிவாசனுக்கு இதுவரை சுமார் 99 கோடி ரூபாய் சட்ட செலவு ஏற்பட்டுள்ள நிலையில் அதில் 51.75 கோடி ரூபாயை ஸ்ரீதர் வேம்பு வழங்கியுள்ளார்.
மேலும் சொத்துத் தகராறு காரணமாக 2025 ஜனவரியில் அமெரிக்க நீதிமன்றம் ஸ்ரீதர் வேம்புவை சுமார் 15 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான பத்திரத்தை டெபாசிட் செய்ய உத்தரவிட்டது இந்த வழக்கை உலகின் மிக விலையுயர்ந்த விவாகரத்துகளில் ஒன்றாக மாற்றியுள்ளது.
பிரமிளாவின் முடிவு
உறவினர் சாட்சியமும் ஆட்டிசம் அறக்கட்டளைக்கு நிதியை வழங்கும் பிரமிளாவின் முடிவும்
ராதா வேம்புவின் பெயரில் உள்ள பங்குகள் உண்மையில் ஸ்ரீதர் வேம்புவுக்குச் சொந்தமானவை என ராதா தன்னிடம் கூறியதாக ஸ்ரீதர் வேம்புவின் மாமா ராம் சீனிவாசன் 2023-ல் அளித்த வாக்குமூலம் இந்த வழக்கில் முக்கியத் திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதன் அடிப்படையில் ஜோஹோ நிறுவனத்தில் ஸ்ரீதர் வேம்புக்கு உண்மையில் 88 சதவீதப் பங்குகள் இருப்பதாகப் பிரமிளா வாதிடுகிறார்.
தற்போது கலிபோர்னியாவில் உள்ள வீட்டில் தனது ஆட்டிசம் பாதித்த மகனுடன் வசித்து வரும் பிரமிளா இந்த வழக்கில் கிடைக்கும் எந்தவொரு நிதியையும் ஆட்டிசம் ஆராய்ச்சிக்காக தான் நிறுவிய அறக்கட்டளைக்கே வழங்கப் போவதாகத் தெரிவித்துள்ளார்.