ஒன்றுக்கும் மேற்பட்ட டீமேட் மற்றும் மியூச்சுவல் ஃபண்ட் கணக்குகளைத் தொடங்குகிறீர்களா? செபியின் புதிய உத்தரவு
செய்தி முன்னோட்டம்
பங்குத் தரகர்கள் மற்றும் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள் மூலம் கணக்கு தொடங்கும் முதலீட்டாளர்களின் சிரமங்களைக் குறைக்கும் வகையில் செபி அமைப்பு 8 முக்கிய மாற்றங்களை அறிவித்துள்ளது. நவம்பர் 25 அன்று வெளியிடப்பட்ட சுற்றறிக்கையின்படி இந்த புதிய விதிமுறைகள் வரும் டிசம்பர் 24 முதல் நடைமுறைக்கு வருகின்றன. இதன் மூலம் முதலீட்டாளர்கள் ஒவ்வொரு நிறுவனத்திடமும் மீண்டும் மீண்டும் ஆவணங்களை சமர்ப்பிக்கும் நிலை முற்றிலுமாகத் தவிர்க்கப்படும். மேலும் கேஆர்ஏ எனப்படும் பதிவு முகமைகள் மூலம் வாடிக்கையாளர் தரவுகள் பாதுகாப்பாகப் பராமரிக்கப்பட்டு பிற நிறுவனங்களுக்கும் எளிதாகப் பகிரப்படும்.
மொபைல் சரிபார்ப்பில் விலக்கு
தானியங்கி கேஒய்சி புதுப்பிப்பு மற்றும் ஆதார் இணைக்கப்பட்ட மொபைல் எண் சரிபார்ப்பில் விலக்கு
புதிய விதிகளின்படி முதலீட்டாளர் ஒருமுறை முழுமையான விவரங்களைச் சமர்ப்பித்தவுடன் 3 வேலை நாட்களுக்குள் அவை கேஆர்ஏ அமைப்பில் பதிவேற்றப்பட வேண்டும்.
இதில் வருமான வரம்பு, தொழில், அரசியல் தொடர்பு நிலை, சிகேஒய்சி எண் மற்றும் டிஜிபின் ஆகியவை ஒருங்கிணைக்கப்படும்.
புதிய கணக்கு தொடங்கும் போது கேஆர்ஏ மற்றும் மத்திய பதிவேட்டில் உள்ள சமீபத்திய தகவல்களைக் கொண்டு விவரங்கள் தானாகவே புதுப்பிக்கப்படும்.
மேலும் ஆதார் அட்டையுடன் இணைக்கப்பட்டு ஏற்கனவே சரிபார்க்கப்பட்ட மொபைல் எண்ணை மறுபடியும் சரிபார்க்க வேண்டிய கட்டாயம் இல்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கேஒய்சி பகிர்வு நிறுத்தம்
கணக்கு மூடப்பட்டாலோ அல்லது 6 மாதங்கள் செயலற்ற நிலையில் இருந்தாலோ கேஒய்சி பகிர்வு நிறுத்தம்
முதலீட்டாளர்களின் தரவுப் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் கணக்கு மூடப்பட்ட 5 வேலை நாட்களுக்குள் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் கேஆர்ஏ அமைப்பிற்குத் தகவல் தெரிவிக்க வேண்டும்.
தகவல் கிடைத்த 2 வேலை நாட்களுக்குள் அந்தப் பதிவுகள் துண்டிக்கப்படும். மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டாளர்களின் கணக்கில் 6 மாதங்கள் எந்த பரிவர்த்தனையோ இருப்போ இல்லாவிட்டால் 5 வேலை நாட்களுக்குள் தகவல் தெரிவித்து தரவுப் பகிர்வு நிறுத்தப்படும்.
அதேபோல் விவரங்களைப் பதிவிறக்கம் செய்தும் 21 வேலை நாட்களுக்குள் கணக்கு தொடங்கப்படாவிட்டால் அந்த இணைப்பும் உடனடியாகத் துண்டிக்கப்படும்.
எளிய நடைமுறை
பெயர் மாற்றத்திற்கான எளிய நடைமுறையும் வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான சலுகையும்
பான் மற்றும் ஆதார் அட்டைகளில் புதிய பெயர் ஏற்கனவே மாற்றப்பட்டிருந்தால் முதலீட்டாளர்கள் பெயர் மாற்றத்திற்கான தனி ஆவணங்களை சமர்ப்பிக்கத் தேவையில்லை.
ஒருவேளை ஆவணங்களில் பெயர் மாறாமல் இருந்தால் திருமண சான்றிதழ், பாஸ்போர்ட் அல்லது அரசிதழ் அறிவிப்பை சமர்ப்பிக்கலாம்.
மேலும் அனைத்து விவரங்களும் அதிகாரப்பூர்வ தரவுத்தளங்கள் மூலம் சரிபார்க்கப்பட்ட பதிவுகள் அனைத்து நிறுவனங்களுக்கும் எளிதாக மாற்றத்தக்கதாக இருக்கும்.
வருமான வரிச் சட்டம் 2025-ன் கீழ் இந்தியாவில் வசிக்கும் ஓசிஐ அட்டைதாரர்கள் மற்றும் வெளிநாட்டினர் வெளிநாட்டு முகவரிச் சான்று அளிக்கத் தேவையில்லை.