அவதூத் சாத்தே டிரேடிங் அகாடமிக்கு செபி ஆப்பு: ₹546 கோடி திரும்பத்தர உத்தரவு
செய்தி முன்னோட்டம்
பங்குச் சந்தை ஒழுங்குமுறை ஆணையமான செபி, அவதூத் சாத்தே டிரேடிங் அகாடமி மற்றும் அதன் நிறுவனர் அவதூத் சாத்தே ஆகியோருக்குப் பலத்த அடி கொடுத்துள்ளது. முறையான பதிவின்றி சட்டவிரோதமாக முதலீட்டு ஆலோசனைகள் மற்றும் ஆராய்ச்சி பரிந்துரைகளை வழங்கிப் பயிற்சி வகுப்புகள் மூலம் வசூலிக்கப்பட்ட ₹546.17 கோடி நிதியை முதலீட்டாளர்களுக்கு உடனடியாகத் திரும்ப வழங்குமாறு செபி வெள்ளிக்கிழமை (அக்டோபர் 23) தனது இறுதி உத்தரவில் உத்தரவிட்டுள்ளது. இதனுடன் சேர்த்து ₹67.87 கோடி வட்டித் தொகையையும் செலுத்த ஆணையிடப்பட்டுள்ளது.
அபராதம்
₹11.5 கோடி அபராதமும் பங்குச் சந்தைக்குத் தடையும்
பங்குச் சந்தை பாதுகாப்பு விதிகளைப் பாதகமான முறையில் மீறியதற்காக அகாடமி மற்றும் அதன் இயக்குநர்களுக்கு மொத்தம் ₹11.5 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
இதில் அவதூத் சாத்தே டிரேடிங் அகாடமிக்கு ₹6 கோடியும், நிறுவனர் அவதூத் சாத்தேக்கு ₹4 கோடியும், மற்றொரு நிறுவனரான கவுரி அவதூத் சாத்தேக்கு ₹1.5 கோடியும் அபராதமாக சுமத்தப்பட்டுள்ளது.
மேலும், அவதூத் சாத்தே மற்றும் அவரது அகாடமி முதலீட்டாளர்களுக்கு நிதியைத் திரும்ப வழங்கும் வரை அல்லது குறைந்தபட்சம் 2 ஆண்டுகளுக்கு பங்குச் சந்தையில் ஈடுபட தடை விதிக்கப்பட்டுள்ளது.
போலி வாக்குறுதிகள்
போலி வாக்குறுதிகள் மற்றும் பதிவு செய்யப்படாத ஆலோசனைகள்
செபி வெளியிட்ட 171 பக்கங்கள் கொண்ட விரிவான உத்தரவில், அகாடமி மற்றும் அதன் நிறுவனர் உரிய செபி உரிமம் ஏதுமின்றி கட்டணப் பயிற்சிகள், பிரத்யேக அமர்வுகள் மற்றும் வாட்ஸ்அப் குழுக்கள் மூலம் வர்த்தகப் பரிந்துரைகளை வழங்கியது உறுதி செய்யப்பட்டுள்ளது.
மேலும், அதிக லாபம் ஈட்டலாம் என தவறான மற்றும் வழிகாட்டும் வாக்குறுதிகளை அளித்து பயிற்சி வகுப்புகள் மூலம் தொடக்கம் முதலே சுமார் ₹601.38 கோடி வரை நிதி திரட்டியதும், அதில் தகுதியான ₹546.17 கோடி கட்டணம் திரும்பத் தரப்பட வேண்டியது என்பதும் கண்டறியப்பட்டுள்ளது.
வங்கி கணக்குகள் முடக்கம்
5 மாத அவகாசம் மற்றும் வங்கி கணக்குகள் முடக்கம்
பாதிக்கப்பட்ட முதலீட்டாளர்களுக்கு நிதியை திரும்ப வழங்க அகாடமிக்கு 5 மாத கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
மேலும் 30 நாட்களுக்குள் நாளிதழ்களில் விளம்பரம் வெளியிட்டுப் பணத்தைக் கோரும் வழிமுறைகளை விளக்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
அதுவரை அவர்களின் வங்கி கணக்குகளில் இருந்து பிற பரிவர்த்தனைகள் செய்ய தடை விதிக்கப்பட்டு கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன.
முறையான மேற்பார்வை செய்யத் தவறியதற்காக கவுரி அவதூத் சாத்தேக்கு 6 மாத காலம் பங்குச் சந்தைக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.