Loading...
கூகுளில் வாடிக்கையாளர் சேவை எண்ணைத் தேடாதீர்கள்; எஸ்பிஐ வங்கியின் முக்கிய எச்சரிக்கை
கூகுளில் வாடிக்கையாளர் சேவை எண்ணைத் தேடாதீர்கள் என எஸ்பிஐ எச்சரிக்கை

கூகுளில் வாடிக்கையாளர் சேவை எண்ணைத் தேடாதீர்கள்; எஸ்பிஐ வங்கியின் முக்கிய எச்சரிக்கை

எழுதியவர் Sekar Chinnappan
Oct 23, 2026
06:49 pm

செய்தி முன்னோட்டம்

கூகுள் போன்ற இணைய தேடுபொறிகளில் வங்கியின் வாடிக்கையாளர் சேவை எண்களைத் தேடி தொடர்புகொள்ள வேண்டாம் என்று பாரத ஸ்டேட் வங்கி (எஸ்பிஐ) தனது வாடிக்கையாளர்களுக்கு அவசர எச்சரிக்கை விடுத்துள்ளது. மோசடியாளர்கள் இணையதளங்களில் போலி உதவி எண்களைப் பதிவிட்டு, வங்கியின் பெயரில் வாடிக்கையாளர்களை ஏமாற்றி பணத்தைத் திருடி வருகின்றனர். தேசிய சைபர் பாதுகாப்பு விழிப்புணர்வு மாத பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக எஸ்பிஐ இந்த முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

போலி எண்கள்

போலி வாடிக்கையாளர் சேவை எண்கள் மூலம் நடைபெறும் மோசடிகள்

வங்கியின் உதவி எண்ணைத் தேடும்போது, தேடுபொறிகளின் பட்டியலில் முதலில் வரும் எண்களை வாடிக்கையாளர்கள் உண்மை என நம்பித் தொடர்புகொள்கின்றனர்.

வங்கியின் அதிகாரி போல பேசும் மோசடியாளர்கள், வங்கியின் சிக்கலைத் தீர்ப்பதாகக் கூறி ரகசியக் கணக்கு விவரங்களைக் கேட்கின்றனர்.

மேலும், பிரத்யேக செயலிகளைப் பதிவிறக்கம் செய்ய வைத்துப் பணத்தைப் பறிக்கின்றனர்.

எனவே, பிற வலைத்தளங்கள், சமூக ஊடகங்கள் மற்றும் விளம்பரங்களில் வரும் எண்களை எக்காரணம் கொண்டும் நம்ப வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறது.

சைபர் பாதுகாப்பு

சைபர் மோசடிகளில் இருந்து தப்பிக்க எஸ்பிஐ வழங்கும் பாதுகாப்பு வழிகள்

வாடிக்கையாளர்கள் தங்கள் வங்கியின் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு சென்று 'Contact Us' பகுதியிலிருந்து மட்டுமே வாடிக்கையாளர் சேவை எண்களைப் பெற வேண்டும்.

எந்தவொரு வங்கியும் தங்கள் வாடிக்கையாளர்களிடம் ஏடிஎம் பின், சிவிவி, இணைய வங்கி கடவுச்சொல் அல்லது ஓடிபி ஆகிய ரகசிய விவரங்களைக் கேட்காது.

கணக்கு மூடப்படும் என்று மிரட்டினாலோ அல்லது புதிய செயலிகளை பதிவிறக்கம் செய்ய சொன்னாலோ உடனடியாக அந்த அழைப்பைத் துண்டித்து விட வேண்டும்.

ADVERTISEMENT

உடனடி நடவடிக்கை

சைபர் மோசடிக்கு ஆளானால் செய்ய வேண்டிய உடனடி நடவடிக்கைகள்

ஒருவேளை நீங்கள் சைபர் மோசடியில் சிக்கி பணத்தை இழந்திருந்தால், உடனடியாக பதற்றமடையாமல் உங்களது வங்கியைத் தொடர்புகொண்டு கணக்கை முடக்க வேண்டும்.

மேலும், மத்திய அரசின் தேசிய சைபர் குற்றப் புகார் இணையதளத்தில் உடனடியாக புகார் பதிவு செய்யலாம்.

இல்லையெனில் 1930 என்ற தேசிய சைபர் கிரைம் உதவி எண்ணிற்குத் தொடர்புகொண்டு உடனடியாகப் புகார் தெரிவிக்கலாம்.

கவனமுடன் செயல்படுவதன் மூலம் நமது பணத்தையும் தனிப்பட்ட தரவுகளையும் பாதுகாத்துக் கொள்ள முடியும்.

ADVERTISEMENT