Page Loader
யூகோ வங்கியில் ரூ.820 கோடி முறைகேடு; 7 நகரங்களில் சிபிஐ சோதனை
கடந்த ஆண்டு, நவம்பர் 10 முதல் 13 வரை 8,53,049 IMPS பரிவர்த்தனைகள் நடந்துள்ளன

யூகோ வங்கியில் ரூ.820 கோடி முறைகேடு; 7 நகரங்களில் சிபிஐ சோதனை

எழுதியவர் Venkatalakshmi V
Mar 07, 2024
07:25 pm

செய்தி முன்னோட்டம்

யூகோ வங்கியில் சந்தேகத்திற்கிடமான வகையில், ரூ.820 கோடி ஐஎம்பிஎஸ் பரிவர்த்தனைகள் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக ராஜஸ்தான் மற்றும் மகாராஷ்டிராவில் உள்ள ஏழு முக்கிய நகரங்களில், 67 இடங்களில் மத்திய புலனாய்வுப் பிரிவு(சிபிஐ) சோதனை நடத்தியது. கடந்த ஆண்டு, நவம்பர் 10 முதல் 13 வரை 8,53,049 IMPS(உடனடி கட்டண முறை) பரிவர்த்தனைகள் நடந்துள்ளன. இதில் 41,000 யூகோ வங்கி கணக்குகளுக்கு ரூ.820 கோடி தவறாக மாற்றப்பட்டது. ஏழு தனியார் வங்கிகளிலிருந்து, சுமார் 14,600 கணக்குகள் மூலம், தொடங்கப்பட்ட IMPS உள்நோக்கப் பரிவர்த்தனைகள், 41,000க்கும் மேற்பட்ட யூகோ வங்கிக் கணக்குகளில் தவறாகப் பதியப்பட்டுள்ளன. இதன் விளைவாக ரூ. 820 கோடி யூகோ வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்பட்டுள்ளது என சிபிஐ செய்தி தொடர்பாளர் கூறினார்.

விசாரணை

UCO வங்கி கணக்கு உள்ளவர்களிடம் CBI விசாரணை

ராஜஸ்தான் மற்றும் மகாராஷ்டிராவில் நடந்த சோதனையில், தங்கள் கணக்கில் 'தவறுதலாக' வந்த பணத்தைப்பெற்று, அதை வங்கியிடம் குறிப்பிடாமல், பயன்படுத்தியவர்களிடம் நடத்தப்பட்டது என்று சிபிஐ செய்தித் தொடர்பாளர் மேலும் கூறினார். இந்த வழக்கில் இது இரண்டாவது கட்டத் தேடல். கடந்த டிசம்பர் 2023இல், கொல்கத்தா மற்றும் மங்களூரில் உள்ள தனியார் நபர்கள் மற்றும் யூகோ வங்கி அதிகாரிகள் சம்பந்தப்பட்ட 13 இடங்களில் தேடுதல் நடத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. "இந்த நடவடிக்கைகளின் போது, ​​UCO வங்கி மற்றும் IDFC தொடர்பான சுமார் 130 குற்றஞ்சாட்டக்கூடிய ஆவணங்கள், அத்துடன் 43 டிஜிட்டல் சாதனங்கள்(40 மொபைல் போன்கள், 2 ஹார்ட் டிஸ்க்குகள் மற்றும் 1 இணைய டாங்கிள் உட்பட) தடயவியல் ஆய்வுக்காக கைப்பற்றப்பட்டன," என்று செய்தித் தொடர்பாளர் கூறினார்.