Loading...
சூதாட்ட ஆப்கள் மற்றும் பிரெடிக்ஷன் மார்க்கெட் அதிவேக வளர்ச்சிக்கு காரணம் இதுதான்; நிதி வல்லுநர் பகீர்!
சூதாட்ட ஆப்கள் மற்றும் பிரெடிக்ஷன் மார்க்கெட் அதிவேக வளர்ச்சிக்கு காரணம் குறித்து நிதி வல்லுநர் எச்சரிக்கை

சூதாட்ட ஆப்கள் மற்றும் பிரெடிக்ஷன் மார்க்கெட் அதிவேக வளர்ச்சிக்கு காரணம் இதுதான்; நிதி வல்லுநர் பகீர்!

எழுதியவர் Sekar Chinnappan
Jul 26, 2026
03:04 pm

செய்தி முன்னோட்டம்

ஆன்லைன் சூதாட்ட ஆப்கள், பிரெடிக்ஷன் மார்க்கெட்டுகள் மற்றும் அதிக ஆபத்துள்ள வர்த்தக முறைகளின் அதிவேக வளர்ச்சிக்கு உலகப் பொருளாதாரத்தில் நிலவும் ஆழமான கட்டமைப்புக் கோளாறுகளே முக்கியக் காரணம் என்று பிரபல முதலீட்டாளரும் நிதிப் பகுப்பாய்வாளருமான ரிதேஷ் ஜெயின் தெரிவித்துள்ளார். வழக்கமான வழிகளில் இனி செல்வத்தை சேர்க்க முடியாது என்ற மக்களின் எண்ணமே இந்த ஆபத்தான போக்கிற்கு முக்கியக் காரணம் என்று எக்ஸ் தளத்தில் அவர் பதிவிட்டுள்ள கருத்து பெரிய அளவில் கவனத்தை ஈர்த்துள்ளது.

பணவீக்கம்

பணப்புழக்கத்தை அதிகரித்து பணவீக்கத்தை ஏற்படுத்திய அமெரிக்கா

கொரோனா பெருந்தொற்று காலத்தில் அமெரிக்க ஃபெடரல் ரிசர்வ் வங்கி அளவுக்கு அதிகமாகப் பணப்புழக்கத்தை உயர்த்தியதே இந்த அனைத்துப் பிரச்சனைகளுக்கும் அடிப்படை மூலக்காரணம் என்று ரிதேஷ் ஜெயின் சுட்டிக்காட்டியுள்ளார்.

அமெரிக்காவின் எம்2 பணப்புழக்கம் ஜனவரி 2020இல் 15.4 டிரில்லியன் டாலராக இருந்தது.

இது ஜனவரி 2022இல் 21.6 டிரில்லியன் டாலராகவும், மார்ச் 2026 நிலவரப்படி 22.6 டிரில்லியன் டாலராகவும் உயர்ந்துள்ளது.

இதனால் சொத்துக்களின் விலை உயர்ந்த அளவுக்கு மக்களின் ஊதியம் உயரவில்லை.

நிதி போராட்டம்

நடுத்தரக் குடும்பங்களின் விரக்தியும் ஓயாத நிதிப் போராட்டமும்

இந்த அளவுக்கு அதிகமான பணப்புழக்கம் காரணமாக உலகளவில் பணவீக்கம் அதிகரித்து, சாதாரண நடுத்தரக் குடும்பங்களின் நிதிப் பாதுகாப்பைக் கேள்விக்குறியாக்கியுள்ளது.

இந்தியா, கனடா, ஆஸ்திரேலியா மற்றும் ஜெர்மனி போன்ற நாடுகளில் உள்ள குடும்பங்களிடையே தீவிர விரக்தி நிலவுவதாக அவர் கூறுகிறார்.

இந்தியாவில் அதிக வருமானம் ஈட்டுபவர்கள் கூட வேகமாக சுழலும் ட்ரெட்மில்லில் ஓடுவது போன்ற உணர்வையே பெறுகிறார்கள் என்றும், மற்ற நாடுகளில் இரண்டு பேர் முழுநேர வேலை செய்தும் குடும்பத்தை நடத்தப் போராடி வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

ADVERTISEMENT

ஆபத்தான மனமாற்றம்

நேர்மையான உழைப்பிற்குப் பலனில்லை என்ற ஆபத்தான மனமாற்றம்

கடின உழைப்பிற்கும் அதற்கான நிதிப் பலன்களுக்கும் இடையே பெரிய இடைவெளி உருவாகும்போது, அது மக்களிடையே மிகவும் ஆபத்தான மனமாற்றத்தை ஏற்படுத்துகிறது என்று ரிதேஷ் ஜெயின் எச்சரிக்கிறார்.

வழக்கமான முறையில் பணத்தை சேமிக்க முடியாது என்று நம்பிக்கை இழக்கும் மக்கள், குறுகிய காலத்தில் அதிக லாபம் ஈட்டும் நோக்கில் ஆபத்தான வழிகளை நாடுகிறார்கள்.

கல்ஷி, பாலிமார்க்கெட், டிரீம்11 போன்ற சூதாட்ட ஆப்களின் எழுச்சி வெறும் டிரெண்ட் அல்ல, அது உடைந்த பொருளாதாரத்தின் அறிகுறியாகும்.

ADVERTISEMENT

வர்த்தகம்

சூதாட்டமாக மாறிய ஃபியூச்சர்ஸ் மற்றும் ஆப்ஷன்ஸ் வர்த்தகம்

சூதாட்ட ஆப்கள் மட்டுமின்றி ஃபியூச்சர்ஸ் மற்றும் ஆப்ஷன்ஸ் வர்த்தகத்தில் மக்களின் பங்கேற்பு அசுரத்தனமாக அதிகரித்துள்ளதும் இந்த பொருளாதாரப் சீர்கேட்டின் பிம்பமே ஆகும்.

நேர்மையான உழைப்பிற்குத் தகுந்த வெகுமதி கண்டிப்பாகக் கிடைக்கும் என்ற நம்பிக்கையை மக்கள் எப்போது இழக்கிறார்களோ, அப்போதே அவர்கள் தங்களின் எதிர்காலத்தை சேமிப்பதற்குப் பதிலாக இதுபோன்ற ஆபத்தான விளைவுகளின் மீது சூதாடத் தொடங்குகிறார்கள் என்று ரிதேஷ் ஜெயின் தனது கருத்தில் மிகத் தெளிவாகத் தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT