ஐரோப்பிய ஒன்றியத்தின் தடை: ஏற்றுமதிக்கான சுத்திகரிப்பில் ரஷ்ய கச்சா எண்ணையை முழுவதும் நிறுத்திய ரிலையன்ஸ்
செய்தி முன்னோட்டம்
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம், ஐரோப்பிய ஒன்றியத்தின் தடைகளுக்கு இணங்கும் வகையில், குஜராத் மாநிலம் ஜாம்நகரில் உள்ள தனது ஏற்றுமதிக்காக மட்டுமே செயல்படும் (SEZ) சுத்திகரிப்பு ஆலையில் ரஷ்ய கச்சா எண்ணையைப் பயன்படுத்துவதை நிறுத்திவிட்டதாக வியாழக்கிழமை (நவம்பர் 20) அறிவித்துள்ளது. ரஷ்யாவின் எரிசக்தி வருவாயைக் குறிவைத்து ஐரோப்பிய ஒன்றியம் விரிவான தடைகளை விதித்துள்ளது. இந்தத் தடைகள், ரஷ்ய கச்சா எண்ணையில் இருந்து தயாரிக்கப்படும் எரிபொருட்களை இறக்குமதி செய்வதையும் விற்பனை செய்வதையும் கட்டுப்படுத்துகின்றன. ஐரோப்பிய ஒன்றியம் ரிலையன்ஸுக்கு ஒரு பெரிய சந்தையாக இருப்பதால், இந்தக் கட்டுப்பாடுகளுக்கு இணங்குவது கட்டாயமாகிறது. ரிலையன்ஸ் நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர், "நவம்பர் 20 முதல் எங்கள் SEZ சுத்திகரிப்பு ஆலைக்குள் ரஷ்ய கச்சா எண்ணையை இறக்குமதி செய்வதை நிறுத்திவிட்டோம்." என்று தெரிவித்தார்.
காலக்கெடு
காலக்கெடுவுக்கு முன்பாகவே நிறுத்திய ரிலையன்ஸ்
ரிலையன்ஸின் குஜராத் SEZ ஆலையில் உள்ள பழைய கச்சா எண்ணெய் இருப்புகளைச் சுத்திகரித்த பிறகு, டிசம்பர் 1, 2025 முதல், SEZ சுத்திகரிப்பு ஆலையிலிருந்து ஏற்றுமதி செய்யப்படும் அனைத்து எரிபொருள் பொருட்களும் ரஷ்யா அல்லாத கச்சா எண்ணையில் இருந்து மட்டுமே தயாரிக்கப்படும் என்று நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்தின் இறக்குமதி தடைகள் ஜனவரி 2026 இல் நடைமுறைக்கு வருவதற்கு முன்பே முழு இணக்கத்தை உறுதிப்படுத்த இந்தக் காலக்கெடுவுக்கு முன்னரே மாற்றங்கள் முடிக்கப்பட்டுள்ளன. ரிலையன்ஸ் தனது அமெரிக்க வர்த்தக நலன்களுக்கு ஆபத்தை விளைவிக்க விரும்பாததால், அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் தடைகளுக்கு இணங்க தனது சுத்திகரிப்பு நடவடிக்கைகளை மாற்றி அமைத்து வருகிறது.