ரிசர்வ் வங்கி பெயரில் ஆன்லைன் மோசடி; பொதுமக்களுக்கு எச்சரிக்கை
இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) தனது பெயரை பயன்படுத்தி நடக்கும் மோசடி நடவடிக்கைகள் குறித்து எச்சரிக்கை விடுத்துள்ளது. ரிசர்வ் வங்கி அதிகாரிகளைப் போல் நடித்து பொதுமக்களை ஏமாற்றும் வகையில் மோசடிகள் அதிகரித்து வருவதாக புகார்கள் வருகின்றன. மோசடிகள் போலி லாட்டரி வெற்றி எனத் தொடங்கி, வங்கி கணக்கை முடக்குவதாக அச்சுறுத்தலை மேற்கொள்ளுதல் போன்ற பல்வேறு நூதன முறைகளை பின்பற்றுகின்றனர். இதற்கான போலியான ஆர்பிஐ லெட்டர்ஹெட்கள் மற்றும் மின்னஞ்சல் முகவரிகளைப் பயன்படுத்துகின்றனர். பொதுமக்கள் மட்டுமல்லாது சிறு மற்றும் நடுத்தர வணிகங்களும் இந்த மோசடிக்கு பலியாகும் போக்கு அதிகரித்து வருகிறது. இவை தவிர கொரோனா தொடங்கியது முதல் வேரூன்றியுள்ள அங்கீகரிக்கப்படாத டிஜிட்டல் கடன் செயலிகளின் மோசடிகளும் தொடர்கின்றன.
ரிசர்வ் வங்கியின் விளக்கம்
தனிநபர்கள் அல்லது நிறுவனங்களுக்கான கணக்குகளை தாங்கள் பராமரிப்பதில்லை என்று ரிசர்வ் வங்கி தெளிவுபடுத்தியுள்ளது. ஆர்பிஐ லாட்டரி வெற்றிகள் அல்லது நிதி விநியோகம் பற்றிய மின்னஞ்சல்கள் அல்லது செய்திகளை அனுப்புவதில்லை என்று தெரிவித்துள்ளது. மேலும், ரிசர்வ் வங்கி அதிகாரிகளாகக் காட்டிக் கொள்ளும் நபர்களின் அழைப்புகள், மின்னஞ்சல்கள் அல்லது பிற தகவல்தொடர்புகள் குறித்து எச்சரிக்கையாக இருக்குமாறு பொதுமக்களுக்கு ரிசர்வ் வங்கி அறிவுறுத்துகிறது. தனிப்பட்ட தகவல்கள், கணக்கு விவரங்கள் அல்லது கேஒய்சி ஆவணங்களின் நகல்களை அடையாளம் தெரியாத நபர்களுடன் அல்லது சரிபார்க்கப்படாத இணையதளங்கள் மற்றும் செயலிகள் மூலம் பகிரக்கூடாது என்று அறிவுறுத்தியுள்ளது. சந்தேகத்திற்கிடமான செயல்கள் ஏதேனும் இருந்தால் உடனடியாக சைபர் கிரைமை தொடர்புகொள்ளுமாறு அறிவுறுத்தியுள்ளது.