வங்கி பாதுகாப்புக்கு கூடுதல் பலம்; பிரதமர் திறந்து வைத்த ஆர்பிஐயின் புதிய டேட்டா சென்டரின் முக்கியத்துவம்
செய்தி முன்னோட்டம்
இந்திய வங்கியியல் அமைப்பின் டிஜிட்டல் பாதுகாப்பை மேலும் வலுப்படுத்தும் நோக்கில், ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் அமைக்கப்பட்ட இந்திய ரிசர்வ் வங்கியின் (ஆர்பிஐ) ₹169 கோடி மதிப்பிலான அதிநவீன தரவு மையம் மற்றும் சைபர் பாதுகாப்புப் பயிற்சி மையத்தை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்துள்ளார். வலிமையான டிஜிட்டல் உள்கட்டமைப்பு மற்றும் சக்திவாய்ந்த கணினி அமைப்புகளே பாதுகாப்பான வங்கியியல் முறைக்கு அடிப்படையாகும் என இந்நிகழ்வில் உரையாற்றிய பிரதமர் சுட்டிக்காட்டினார். இந்தியாவின் நிதி சார்ந்த சுயசார்பை இத்திட்டம் மேலும் அதிகரிக்கும் என அவர் குறிப்பிட்டார்.
வங்கி சேவைகள்
24/7 வங்கியியல் சேவைகள் மற்றும் எளிய மக்களுக்கான நிதி சேர்க்கை
இந்திய வங்கியியல் துறையின் செயல்திறன் உயர்ந்துள்ளதால், பொதுமக்கள் தற்பொழுது 24 மணி நேரமும் தடையற்ற வங்கியியல் சேவைகளைப் பெற முடிவதாக பிரதமர் மோடி பெருமிதத்துடன் தெரிவித்தார்.
கடந்த காலத்தில் நிதி வசதிகள் கிடைக்கப்பெறாத எளிய தொழிலாளர்கள், பாரம்பரியக் கலைஞர்கள் மற்றும் தெருவோர வியாபாரிகளுக்கு முறையான வங்கி சேவைகள் சென்றடைந்துள்ளன.
முந்தைய காங்கிரஸ் ஆட்சியில் பணக்காரர்களுக்கு மட்டுமே வங்கிக் கடன்கள் எளிதாகக் கிடைத்ததாகவும், தற்போதைய ஆட்சியில் ஏழை மற்றும் நடுத்தர மக்கள் பயன்பெற்று வருவதாகவும் அவர் தனது உரையில் சுட்டிக்காட்டினார்.
தொழில் வாய்ப்புகள்
எதிர்கால வங்கியியல் வளர்ச்சி மற்றும் ஒடிசாவின் தொழில் வாய்ப்புகள்
கடந்த பத்து ஆண்டுகள் வங்கியியல் சேவைகளை அனைவருக்கும் கொண்டு சேர்க்கும் காலமாக இருந்த நிலையில், வரும் பத்து ஆண்டுகள் வங்கியியல் சேவைகளை பாதுகாப்பாகவும் நம்பகமானதாகவும் மாற்றுவதில் கவனம் செலுத்தப்படும் என பிரதமர் கூறினார்.
சுரங்கம் முதல் மைக்ரோசிப் தயாரிப்பு வரை ஒடிசா மாநிலம் அடைந்து வரும் வளர்ச்சி அம்மாநில இளைஞர்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் என்றார்.
இந்நிகழ்வில் பங்கேற்ற நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், நாட்டின் நிதி ஸ்திரத்தன்மைக்கும் பொருளாதார வளர்ச்சிக்கும் இத்தகைய நவீன உள்கட்டமைப்புகள் மிக முக்கியம் என வலியுறுத்தினார்.
சைபர் பயிற்சி
செயற்கை நுண்ணறிவு சவால்கள் மற்றும் பணியாளர்களுக்கான சைபர் பயிற்சி
இந்திய ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா பேசுகையில், செயற்கை நுண்ணறிவு (ஏஐ) வளர்ச்சியடையும் இந்த காலத்தில் சைபர் பாதுகாப்பு மிகவும் அவசியமான ஒன்றாக மாறியுள்ளது என்றார்.
ஆர்பிஐ தனது சொந்த ஊழியர்களுக்கு மட்டுமின்றி, வணிக வங்கிகள் மற்றும் பிற நிதி நிறுவனங்களின் ஊழியர்களுக்கும் ஏஐ, பிக் டேட்டா அனலிட்டிக்ஸ், குவாண்டம் மற்றும் பிளாக்செயின் தொழில்நுட்பங்களில் பயிற்சி அளிக்கும் என அவர் தெரிவித்தார்.
2047-க்குள் இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்றும் இலக்கிற்கு இந்த தொழில்நுட்பப் பாதுகாப்பு உறுதுணையாக இருக்கும் என்றார்.