மாலத்தீவுடன் கரன்சி பரிமாற்ற ஒப்பந்தம்; இந்திய ரிசர்வ் வங்கி அறிக்கை
செய்தி முன்னோட்டம்
இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) திங்கட்கிழமை (அக்டோபர் 7) வெளியிட்ட ஒரு அறிக்கையில், சார்க் நாணய மாற்று கட்டமைப்பின் 2024-27இன் கீழ் மாலத்தீவு நாணய ஆணையத்துடன் (எம்எம்ஏ) நாணய பரிமாற்ற ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளதாக அறிவித்துள்ளது.
ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக, அமெரிக்க டாலர்/யூரோ ஸ்வாப் விண்டோவின் கீழ் 400 மில்லியன் டாலர்கள் மற்றும் இந்திய ரூபாய் ஸ்வாப் விண்டோவின் கீழ் ரூ.3,000 கோடி நிதியுதவியை ஆர்பிஐ எம்எம்ஏவிற்கு வழங்க உள்ளது.
இந்த ஒப்பந்தம் ஜூன் 18, 2027 வரை செல்லுபடியாகும் என்றும் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
சார்க்
சார்க் நாணய மாற்று கட்டமைப்பு
சார்க் நாணய மாற்று கட்டமைப்பு நவம்பர் 15, 2012 அன்று செயல்பாட்டுக்கு வந்தது. இது குறுகிய கால அந்நியச் செலாவணி பணப்புழக்கத் தேவைகள் அல்லது நீண்ட கால ஏற்பாடுகள் செய்யப்படும் வரை குறுகிய கால இருப்புச் செலுத்துதல் அழுத்தத்திற்கான நிதியை வழங்குவதற்காக உருவாக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக, பிரதமர் மோடி மற்றும் மாலத்தீவு அதிபர் முகமது முய்சு ஆகியோர் மாலத்தீவில் ரூபே அட்டையை அறிமுகப்படுத்தினர்.
ஹனிமதூ சர்வதேச விமான நிலையத்தில் புதிய ஓடுபாதையை திறந்து வைத்தனர். மேலும், கடந்த ஆண்டு முதல் சிக்கலில் இருந்து வந்த இருதரப்பு உறவுகளை வலுப்படுத்த ஒப்புக்கொண்டனர்.
முன்னதாக, நான்கு நாள் அரசுமுறைப் பயணமாக வந்துள்ள முகமது முய்சு, டெல்லியில் உள்ள ஹைதராபாத் இல்லத்தில் பிரதமர் மோடியுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.