இந்திய நிதி அமைப்பின் தூண்கள்: 2026 D-SIB பட்டியலில் எஸ்பிஐ, எச்டிஎஃப்சி மற்றும் ஐசிஐசிஐ வங்கிகளை தக்கவைத்தது ரிசர்வ் வங்கி
செய்தி முன்னோட்டம்
இந்திய ரிசர்வ் வங்கி திங்கட்கிழமை (நவம்பர் 23) வெளியிட்ட முக்கிய அறிவிப்பில் பாரத ஸ்டேட் வங்கி (எஸ்பிஐ), எச்டிஎஃப்சி வங்கி மற்றும் ஐசிஐசிஐ வங்கி ஆகியவற்றை உள்நாட்டு அமைப்பு ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்த வங்கிகளாக தக்கவைத்துக் கொண்டுள்ளது. மார்ச் 31, 2026 நிலவரப்படி வங்கிகளிடமிருந்து சேகரிக்கப்பட்ட நிதித் தரவுகளின் அடிப்படையில் இந்த புதிய பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இந்திய பொருளாதாரத்தின் நிதி நிலைத்தன்மைக்கு இம்மூன்று வங்கிகளும் மிக முக்கியமான தூண்களாக கருதப்படுகின்றன. எனவே இவற்றின் செயல்பாடுகளில் எந்த பாதிப்பும் ஏற்படாமல் இருக்க ரிசர்வ் வங்கி சிறப்புக் கண்காணிப்பு விதிகளைப் பின்பற்றுகிறது.
மூலதனம்
மூன்று வங்கிகளும் பராமரிக்க வேண்டிய கூடுதல் CET1 மூலதன இடையக விவரங்கள்
இந்த பட்டியலில் இடம்பெற்றுள்ள மூன்று வங்கிகளும் வழக்கமான மூலதன பாதுகாப்பு இடையகத்திற்கு மேலாக தங்களின் ஆபத்து-எடையிடப்பட்ட சொத்துக்களின் அடிப்படையில் கூடுதல் மூலதனத்தைப் பராமரிக்க வேண்டும் என ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது.
அதன்படி பாரத ஸ்டேட் வங்கி 0.80 சதவீதமும், எச்டிஎஃப்சி வங்கி 0.40 சதவீதமும் கூடுதல் பொதுப் பங்கு அடுக்கு 1 மூலதனத்தை வைத்திருக்க வேண்டும்.
இதேபோல் ஐசிஐசிஐ வங்கி 0.20 சதவீதக் கூடுதல் மூலதனத்தைக் கட்டாயம் பராமரிக்க வேண்டும்.
எந்தவொரு பொருளாதார நெருக்கடியையும் இந்த வங்கிகள் எளிதில் சமாளிக்க வேண்டும் என்பதே இந்த விதியின் முக்கிய நோக்கமாகும்.
முக்கியத்துவம் வாய்ந்த வங்கிகள்
உள்நாட்டு அமைப்பு ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்த வங்கிகள் கட்டமைப்பின் வரலாறு
ரிசர்வ் வங்கி முதன்முதலில் 2014 ஜூலை 22 ஆம் தேதி உள்நாட்டு அமைப்பு ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்த வங்கிகளைக் கையாள்வதற்கான கட்டமைப்பை வெளியிட்டது.
பின்னர் வங்கித் துறையின் வளர்ச்சிக்கு ஏற்ப 2023 டிசம்பர் 28 ஆம் தேதி இந்த விதிமுறைகள் புதுப்பிக்கப்பட்டன.
இந்தக் கட்டமைப்பின் கீழ் வங்கிகளின் அமைப்பு ரீதியான முக்கியத்துவ மதிப்பெண்களின் அடிப்படையில் அவை வெவ்வேறு பிரிவுகளில் வகைப்படுத்தப்படுகின்றன.
அதற்கேற்ப அந்தந்த வங்கிகள் கூடுதலாக பராமரிக்க வேண்டிய மூலதன அளவு ரிசர்வ் வங்கியால் தீர்மானிக்கப்படுகிறது.
முன்னணி வங்கிகளின் பின்னணி
2015 முதல் தொடர்ந்து இப்பட்டியலில் இடம்பெற்று வரும் முன்னணி வங்கிகளின் பின்னணி
ரிசர்வ் வங்கியின் விதிகளின்படி 2015 ஆம் ஆண்டு முதல் இந்த முக்கியத்துவம் வாய்ந்த வங்கிகளின் பெயர்கள் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டு வருகின்றன.
ஆரம்பத்தில் 2015 மற்றும் 2016 ஆகிய ஆண்டுகளில் பாரத ஸ்டேட் வங்கி மற்றும் ஐசிஐசிஐ வங்கி ஆகிய இரண்டு மட்டுமே இந்தப் பட்டியலில் இடம்பெற்றிருந்தன.
அதனைத் தொடர்ந்து 2017 ஆம் ஆண்டில் எச்டிஎஃப்சி வங்கியும் இந்தப் பட்டியலில் இணைக்கப்பட்டது.
அன்றிலிருந்து இன்று வரை இந்தியாவின் மிகப்பெரிய வங்கிகளான இம்மூன்றும் தொடர்ந்து இப்பட்டியலில் தங்களது இடத்தைத் தக்கவைத்து வருகின்றன.