Loading...
ஏடிஎம் பணம் எடுக்கும் விதிகளில் ஆர்பிஐ அதிரடி மாற்றம்: வாடிக்கையாளர்கள் தெரிந்து கொள்ள வேண்டியவை என்ன?
ஏடிஎம் பணம் எடுக்கும் விதிகளில் ஆர்பிஐ மாற்றம்

ஏடிஎம் பணம் எடுக்கும் விதிகளில் ஆர்பிஐ அதிரடி மாற்றம்: வாடிக்கையாளர்கள் தெரிந்து கொள்ள வேண்டியவை என்ன?

எழுதியவர் Sekar Chinnappan
Nov 28, 2026
04:25 pm

செய்தி முன்னோட்டம்

வங்கி வாடிக்கையாளர்களின் பணப் பரிவர்த்தனைகளை வெளிப்படையானதாக மாற்றும் வகையில் ஏடிஎம் மற்றும் பாயிண்ட் ஆஃப் சேல் இயந்திரங்கள் வழியாகப் பணம் எடுப்பதற்கான புதிய ஒருங்கிணைந்த வழிகாட்டுதல்களை இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) வெளியிட்டுள்ளது. கடந்த காலங்களில் வெளியிடப்பட்ட 17 சுற்றறிக்கைகளை ஒருங்கிணைத்து உருவாக்கப்பட்டுள்ள இந்தப் புதிய விதிகள் நவம்பர் 27 முதல் நாடு முழுவதும் அமலுக்கு வந்துள்ளன. இந்தப் புதிய விதிமுறைகளின் கீழ் வாடிக்கையாளர்கள் தங்கள் மாதாந்திர இலவச ஏடிஎம் பரிவர்த்தனைகளை எவ்வளவு பயன்படுத்தியுள்ளார்கள் மற்றும் அடுத்து எவ்வளவு கட்டணம் விதிக்கப்படும் என்பது குறித்து வங்கிகள் கட்டாயம் தகவல் தெரிவிக்க வேண்டும்.

இலவசப் பரிவர்த்தனை

சொந்த வங்கி மற்றும் பிற வங்கி ஏடிஎம்களுக்கான இலவசப் பரிவர்த்தனை வரம்புகளும் கட்டணமும்

புதிய வழிகாட்டுதலின்படி சேமிப்புக் கணக்கு வைத்திருப்பவர்கள் மாதந்தோறும் சொந்த வங்கி ஏடிஎம்களில் பணம் எடுத்தல் மற்றும் பேலன்ஸ் சரிபார்த்தல் உள்ளிட்ட 5 இலவசப் பரிவர்த்தனைகளை மேற்கொள்ளலாம்.

பிற வங்கி ஏடிஎம்களில் சென்னை மும்பை டெல்லி கொல்கத்தா பெங்களூரு மற்றும் ஹைதராபாத் ஆகிய மெட்ரோ நகரங்களில் 3 இலவசப் பரிவர்த்தனைகளும் பிற நகரங்களில் 5 இலவசப் பரிவர்த்தனைகளும் வழங்கப்படுகின்றன.

இந்த இலவச வரம்பு முடிந்த பிறகு மேற்கொள்ளப்படும் ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் வங்கிகள் அதிகபட்சம் 23 ரூபாய் மற்றும் வரிகளை மட்டுமே வசூலிக்க முடியும் என ரிசர்வ் வங்கி கட்டுப்பாடு விதித்துள்ளது.

ஏடிஎம் உச்சவரம்பு

பிற வங்கி ஏடிஎம் உச்சவரம்பு மற்றும் தோல்வியடையும் பரிவர்த்தனைகளுக்கான முக்கியப் பாதுகாப்பு

பிற வங்கி ஏடிஎம்களில் பணம் எடுக்கும்போது ஒரு பரிவர்த்தனைக்கு அதிகபட்சம் 10 ஆயிரம் ரூபாய் மட்டுமே எடுக்க முடியும் என ரிசர்வ் வங்கி வரம்பு நிர்ணயித்துள்ளது.

அதேநேரம் தொழில்நுட்பக் கோளாறு இணையத் துண்டிப்பு அல்லது இயந்திரத்தில் பணம் இல்லாத காரணங்களால் ஏடிஎம் பரிவர்த்தனை தோல்வியடைந்தால் அதனை இலவசப் பரிவர்த்தனை வரம்பில் சேர்க்கக் கூடாது என உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும் அத்தகைய தோல்வியடைந்த பரிவர்த்தனைகளுக்கு வங்கிகள் வாடிக்கையாளர்களிடம் எந்தக் கட்டணமும் வசூலிக்கக் கூடாது என்றும் மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

உள்ளூர் மொழி

உள்ளூர் மொழியில் கட்டண அறிவிப்பு மற்றும் கடைகளில் உள்ள PoS இயந்திரத்தில் பணம் எடுக்கும் வசதி

அனைத்து ஏடிஎம் மையங்களிலும் அதிகபட்ச பணம் எடுக்கும் வரம்பு இலவசப் பரிவர்த்தனை எண்ணிக்கை கட்டண விவரங்கள் மற்றும் வாடிக்கையாளர் சேவை எண்களை ஆங்கிலம் இந்தி மற்றும் உள்ளூர் மொழியில் கட்டாயம் காட்சிப்படுத்த வேண்டும்.

இயந்திரத்தில் பணம் இல்லையென்றால் வாடிக்கையாளர் கார்டை செலுத்துவதற்கு முன்பே திரையில் அறிவிப்பு காட்டப்பட வேண்டும்.

இதுதவிர கடைகளில் உள்ள அங்கீகரிக்கப்பட்ட பிஓஎஸ் இயந்திரங்களில் டெபிட் கார்டு அல்லது யுபிஐ மூலம் பொருள் வாங்காமலேயே ஒரு முறைக்கு 2 ஆயிரம் ரூபாய் வீதம் மாதத்திற்கு 10 ஆயிரம் ரூபாய் வரை எடுத்துக் கொள்ளலாம்.

ADVERTISEMENT